Breaking News

இந்திய நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்க காரணம் மத்திய அரசு தான் என்று 14 எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் செல்போன் ஒட்டுக்கேட்பு, வேளாண் சட்டங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பற்றி விவாதிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால், மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 11 நாளாக முடங்கியது. நேற்று 12வது நாளாக காலை 11 மணிக்கு மக்களவையில் கூடியதும், பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், அவையை நடத்த முடியாமல் சபாநாயகர் அடுத்தடுத்து ஒத்திவைத்தார். இறுதியாக மாலை 3.30 மணிக்கு அவை கூடியதும், தேங்காய் மேம்பாட்டு ஆணைய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

Fourteen opposition parties have blamed the central government for the continued paralysis of the Indian parliamentஇதேபோல், மாநிலங்களவையும் நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், பலமுறை ஒத்திவைக்கப்பட்டு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அமளிக்கு இடையே இந்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை திருத்த மசோதா, வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.இந்நிலையில், நாடாளுமன்றம் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த முடியாமல் முடங்குவதற்கு ஒன்றிய அரசே காரணம் என்று காங்கிரஸ், திமுக, திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சேர்ந்த 18 தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், பெகாசஸ் பிரச்சனை மற்றும் விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சீர்குலைப்பதாக குற்றம் சாட்டுவது துரதிருஷ்டவசமானது என்றும் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற முடங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்று கூறியுள்ள எதிர்கட்சிகள் இப்பிரச்னைகள் பற்றி விவாதிக்க மத்திய அரசு விவாதிக்க மறுப்பது ஆணவ செயலாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.

இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுத்தும், விவாதத்தை நடத்த அரசு மறுக்கிறது. விவாதத்திற்கான கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் உள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்ட 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களை மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Link Source: https://bit.ly/2VBhcCh