Breaking News

பிரிட்டனை தொடர்ந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பரிசோதனை முறையில் தொடங்கிய வாரத்தில் 4 நாள் பணி திட்டம்.

ஆஸ்திரேலியாவில் உள்ள 20 நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் 6 மாதங்களுக்கு இத்திட்டத்தை பரிசோதனை முறையில் அமல்படுத்தவுள்ளன.

Following the UK, the project began 4 days a week in Australia and New Zealand on a trial basis.

வாரத்தில் 5 நாட்கள் பணி, இரண்டு நாட்கள் விடுமுறை என்பது கார்ப்பரேட் நிறுவனங்களில் தற்போது உள்ள நடைமுறையாகும். ஆனால் தற்போது உள்ள ஊதியத்துடன் 4 நாட்கள் பணி, 3 நாட்கள் விடுமுறை வழங்குவதால், ஊழியர்களின் உற்பத்தி திறன் அதிகரிப்பதாகவும், மன அழுத்தம் குறைவதாக வெளியான ஆய்வுகளின் அடிப்படையில் இந்த திட்டம் பல்வேறு நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி 4 நாட்கள் பணி 3 நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தை பரிசோதனை முறையில் பிரிட்டனை சேர்ந்த 70 நிறுவனங்கள் அண்மையில் நடைமுறைபடுத்தியது.

இதே போன்று ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தை சேர்ந்த சில நிறுவனங்களும் இத்திட்டத்தை பரிசோதனை முறையில் நடைமுறை படுத்தவுள்ளன.

இத்திட்டத்தின் படி ஆஸ்திரேலியாவில் உள்ள 20 நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் 6 மாதங்களுக்கு இத்திட்டத்தை பரிசோதனை முறையில் அமல்படுத்தவுள்ளன. அதே நேரம் அவர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் உள்ள தொலைத்தொடர்பு, தொழில் நுட்பம், வர்த்தக நிறுவனங்கள் இந்த பரிசோதனை முயற்சியில் இறங்கியுள்ளன.

ஐஸ்லாந்தில் 2015-2019 வரை இத்திட்டம் பல்வேறு பொது துறை நிறுவனங்களில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அதில் ஊழியர்களின் உற்பத்தி திறன் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டதால் இத்திட்டம் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் கோவிட் ஊரடங்கு வழக்கமான நடைமுறையில் இருந்து பல புதிய முறைகளுக்கு நிறுவனங்களை மாற காரணமாக அமைந்துள்ளது. முழு ஊதியத்துடன் 3 நாட்கள் விடுமுறை, 4 நாட்கள் பணி என்ற திட்டம் ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிப்பதாகவும்,உற்பத்தி அதிகரிப்பதும் இதற்கு முந்தைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.