Breaking News

ஆக்சிஜன் விவகாரத்தில் வதந்தி பரப்புவோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் : உத்தரப்பிரதேச முதல்வர் யோகி எச்சரிக்கை

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கும் எந்தவொரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும், கள்ளச்சந்தையில் விற்பதும், பதுக்கி வைப்பதுமே காரணம் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

மேலும், இங்குள்ள சூழலை சீர்குலைக்கும் வகையில் ஆக்சிஜன் தொடர்பாக சமூக வலை தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக அதிகாரிகளுடனான உயர்மட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். அக்கூட்டத்தில் பேசிய அவர் ஆக்சிஜன், மருந்து உள்ளிட்ட பொருட்களை கள்ளச்சந்தையில் பதுக்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். சில சமூக விரோத அமைப்புகள் திட்டமிட்டு வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர்கள் மீது கூட்டுச்சதி, தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

oxygen cylinderஆக்சிஜன் சிலிண்டரின் தேவையும், அது குறித்த கவலையும் இல்லாத சில நபர்கள் வேண்டுமென்றே விஷமத்தனமாக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் யோகி கூறியுள்ளார். அரசின் உத்தரவை அடுத்து அம்மாநில காவல்துறை மருந்து, ஆக்சிஜன் பதுக்குவோரை, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வோரை கண்டறிய சிறப்புக் குழுக்களை அமைத்து விசாரித்து வருகிறது.

அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குறிப்பிட்ட தகவல்களை சமூக வலைதளங்களில் மீண்டும், மீண்டும் பரப்பி வரும் நபர்கள் கண்டறியப்பட்டுள்ளதாவும் அவர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் பிரஷாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 42 பேர் கைது செய்யப்பட்டு்ள்ளதாகவும், 239 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 688 ரெம்டிசிவர் மருந்துகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.