Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவில் கொரோனா காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட 13 மாத பெண் குழந்தை : குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் அளவு கடந்த இரங்கல்

தெற்கு ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் 13 மாத பெண் குழந்தை தூக்கத்திலேயே உயிரிழந்த நிலையில் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Karly Conry, Ryan தம்பதியின் 13 மாத பெண் குழந்தை Dakota, தனது வழக்கமான செயல்களை முடித்துக்கொண்டு இரவு தூங்கியதாகவும், ஆனால் சில மணி நேரங்களிலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குழந்தைக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் கருணை தொற்று காரணமாக தான் குழந்தை உயிரிழந்தது என்பது தொடர்பான ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அது தொடர்பான முடிவுகள் விரைவில் வெளியாகும் என்றும் தெற்கு ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

குழந்தையின் உயிர் இழப்பால் தாங்க முடியாத துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 13 மாத பெண் குழந்தையின் உயிர் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்றும் இந்த நிலையை அவர்கள் தாங்கி கொள்வதற்கான மன வலிமையைப் பெறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கடுமையான துயரம், மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் சிறுமியின் குடும்பத்திற்கு ஈடு செய்ய இயலாத இழப்பு குறித்து தான் வருத்தத்தை பதிவு செய்ததாக தெற்கு ஆஸ்திரேலியா ப்ரீமியர் Steven Marshall கூறியுள்ளார்.

சந்தேகத்திற்குரிய மரணங்கள் குறித்து விசாரணை நடத்தும் Coroner விசாரணையின் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், கொரோனா தொற்று பாதித்த குழந்தை உயிரிழக்கும் அளவுக்கு என்னவிதமான பாதிப்பு ஏற்பட்டது என்பதை கண்டறியும் வகையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ப்ரீமியர் தெரிவித்துள்ளார்.

13 மாத பெண் குழந்தை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தெற்கு ஆஸ்திரேலியா மட்டுமின்றி பரவலாக சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தெற்கு ஆஸ்திரேலியாவில் ஆயிரத்து 374 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 94 வயதான மூதாட்டி ஒருவர் தொற்று பாதிப்பு தீவிரம் காரணமாக உயிரிழந்தார்.

பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தி இருப்பதாக ப்ரீமியர் Steven Marshall தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3FZm1aR