Breaking News

ஆந்திராவில் 12 வயதில் பெற்ற கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்திய அமெரிக்க வாழ் இந்திய இளைஞர் : மனிதாபிமான சம்பவம் என பலரும் நெகிழ்ச்சி

2010ம் ஆண்டு ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த மோகன் என்பவர் தனது மகன் ப்ரவீன் உடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது வேதசத்தைய்யா என்பவர் சைக்கிளில் வேர்கடலை விற்பனை செய்து கொண்டிருந்தார். வேற்கடலை உண்ண விரும்பிய சிறுவன் ப்ரவீன், 25 ரூபாய்க்கு வேதசத்தைய்யாவிடம் வேர்கடலை வாங்கியுள்ளான். ஆனால், அவனது தந்தை மோகனிடம் அதற்கான பணம் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனை அறிந்த சிறுவன் ப்ரவீன் வேர்க்கடலை பொட்டலத்தை திரும்ப வேதசைத்தயாவிடம் கொடுத்துள்ளான். அதற்கு அவர், பணத்தை நாளை வந்து தருமாறு கூறியுள்ளார்.

மறுநாள், தந்தை மோகனுடன் கடற்கரைக்கு ப்ரவீன் வந்த நிலையில் வேர்க்கடலை வியாபாரி வேதசைத்தைய்யா அங்கு இல்லை என்றும், அதன் பின்னர் மோகன் தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விடுமுறையில் இந்தியா திரும்பிய பிரவீன், தான் வாங்கிய வேர்க்கடலைக்கான பணம் 25 ரூபாயை திரும்பக் கொடுக்க விரும்பி உள்ளார். இதனை அடுத்து காக்கிநாடா கடற்கரைக்கு சென்று வேதசைத்தய்யாவை தேடி அலைந்துள்ளார்.
அவர் கிடைக்காத நிலையில், தனது உறவினரும், காக்கிநாடா சட்டமன்ற உறுப்பினருமான சந்திரசேகரிடம் விவரத்தை கூறியுள்ளார் ப்ரவீன்.

இதனை அடுத்து வேதசைத்தைய்யாவுடன் ப்ரவீன் எடுத்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு தேடிய நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரியவந்தது. இதனை அடுத்து வேதசைத்தய்யாவின் மனைவியை வீட்டுக்கு வரவழைத்தார் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர். அவரிடம் ப்ரவீன் தான் 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 25 ரூபாய் கடலைக்கான பணத்தை வட்டியுடன் சேர்த்து 25 ஆயிரமாக திரும்பக் கொடுத்துள்ளார்.

கடற்கரையில் வேர்க்கடலையை கடனாக கொடுத்ததை 12 ஆண்டுகளுக்கு பின்னரும் நினைவு கூர்ந்து, அவர் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு வட்டியுடன் சேர்த்து அந்த தொகையை கொடுத்த ப்ரவீன் மனதை பாராட்டி பலரும் நெகிழ்ந்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்தியை சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Link Source: https://bit.ly/3pUIWPc