Breaking News

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் : பணம் செல்போனுக்காக மருத்துவமனை ஊழியர் கொலை செய்தது அம்பலம்

சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் மவுலி தனது மனைவி சுமிதாவை கொரோனா சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதித்தார்.

மூன்றாவது தளத்தில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்த சுமிதா திடீரென காணாமல் போனதாக கூறப்பட்டது. மே 22ஆம் தேதி இரவு மனைவிக்கு உணவு கொடுத்து விட்டு வீட்டிற்கு சென்ற மௌலி மறுநாள் வந்து பார்த்தபோது அவர் படுக்கையில் இல்லை. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவருக்கும் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8வது தளத்தில் சுமிதாவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பான மருத்துவமனை அறிக்கையில் அவர் கொரோனா தொற்று காரணமாகவே உயிரிழந்ததாக அறிக்கை அளிக்கப்பட்டது. ஆனால் தனது மனைவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி மவுலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

rajiv gandhi hospital chennaiஆக்சிஜன் அளவு குறைவாக இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் எதற்காக எட்டாவது மாடிக்குச் சென்றார், அவர் உயிரிழந்து இத்தனை நாட்கள் கழித்து மின்பகிர்மான அறையில் சடலமாக மீட்கப்பட்டது வரை ஏன் நோயாளியை மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றும் பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

அதில் சுமிதாவின் செல்போன் எண்ணை கொண்டு விசாரணை செய்யப்பட்டதில் அந்த எண் மருத்துவமனை துப்புரவு ஊழியர் ஒருவரிடம் இருப்பது தெரியவந்தது. இதனை எடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. செல்போன் மற்றும் பணத்திற்காக சுமிதாவை கொலை செய்துவிட்டு, 8வது தளத்தில் உள்ள மின்பகிர்மான அறையில் வைத்து விட்டதாகவும் பின்னர் சடலத்தை அகற்றலாம் என்று நினைத்து அது முடியாமல் போனதாகவும் போலீஸ் விசாரணையில் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அங்கு இருந்தது சுமிதாவின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து துப்புரவு பெண் ஊழியரை கைது செய்த போலீசார் அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணை பணம் செல்போனுக்காக மருத்துவமனையிலேயே கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Link Source: https://bit.ly/2UbQz6s