உலகம் முழுவது உள்ள தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் தங்கள் செல்வங்களை பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர்.
இந்த முதலீடுகள், சட்டவிரோதமாகவோ அல்லது வரி ஏய்ப்பு செய்வதற்காகவோ , கட்டுப்பாடுகள் குறைவாக உள்ள நாடுகளில் முதலீடு செய்யப்படுகிறது.
இது போன்று விர்ஜீன் தீவுகளில் உள்ள பல்வேறு நாடுகளில் உலகம் முழுவதும் உள்ள முக்கிய நபர்களால் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் குறித்த ஆவணங்கள் கசிந்துள்ளது. சுமார் 1 கோடிக்கும் அதிகமான ஆவணங்களை ஆய்வு செய்த சர்வதேச அளவிலான பத்திரிக்கையாளர்கள் குழு பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலியாவில் உள்ள ரியல் எஸ்டேட் துறையில் ஏராளமான சர்வதேச முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது பண்டோரா ஆவணங்கள் மூலமாக தெரியவந்துள்ளது .
மற்ற நாடுகளைப் போல அவுஸ்திரேலியாவில் சொத்து உரிமையாளர்கள் உடைய விவரங்கள் சேமிக்கப்படுவதில்லை .
இதனை கருத்தில் கொண்டு வெளிநாடுகளை சேர்ந்த சர்ச்சைக்குரிய நபர்களும் மற்ற நாடுகளை சேர்ந்தவர்களும் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபலமான ஹோட்டல்கள், பால் பண்ணைகள், சொகுசு விடுதிகளை வாங்கி குவித்து இருப்பது தெரியவந்துள்ளது.
கிடைக்கக்கூடிய ஆவணங்கள் நேரடியாக அந்த பணத்திற்கான சொந்தக்காரர்கள் அடையாளப்படுத்துவதில்லை, ஆனால் அந்த முதலீடுகள் எவ்வாறு ஆஸ்திரேலியாவிற்கு நுழைகின்றன என்று விவரத்தை நமக்கு தெரிவிக்கின்றன.
உதாரணமாக தாஸ்மானியா விலுள்ள சுமார் 1000 ஏக்கர் பரப்பளவிலான இரண்டு பால் பண்ணை அண்மையில் சுமார் 50 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விற்பனை வெளிநாட்டிலுள்ள ஒரு அறக்கட்டளையால் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது . அதேபோன்று ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் சிட்னியில் உள்ள முக்கிய தளத்தில் 2 சொகுசு குடியிருப்புகளை வாங்கியதும் தெரியவந்துள்ளது. செல்வாக்கு மிக்க நபராக கருதப்படக்கூடிய திருக்குமார் நடேசனுக்கு இந்த இடத்தில் தொடர்பிருக்கலாம் கருதப்படுகிறது. ஆனால் அந்த கொள்முதல் அனைத்தும் வெவ்வேறு நிறுவனங்களின் பெயர்களிலும் , அறக்கட்டளைகளின் பெயர்களிலும் நடைபெறுவதால், இதன் உரிமையாளர் யார் என்பதை கண்டறிவது சவாலாகவே உள்ளது.
அதே போல சீனாவின் மிகப்பெரிய தனியார் ஸ்டீல் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளரின் பெயரும் பண்டோரா ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர்களில் ஆஸ்திரேலியாவில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் நடைபெறுவது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
குறிப்பாக சட்டவிரோதமாக வரக்கூடிய இதுபோன்ற பணங்கள் மூலமாக அதிக அளவுக்கு வர்த்தகம் நடைபெறுவது சந்தையின் மதிப்பை உயர்த்தும். அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்க பூமியாக மாறிவிடும் என்றும் அஞ்சப்படுகிறது.
அதேநேரம் ஆஸ்திரேலியாவில் இது போன்ற சொத்து உரிமையாளர்களின் ஆவணங்களை சரி செய்ய சுமார் 430 மில்லியன் மதிப்பீட்டில் திட்டம் தயார் நிலையில் உள்ளதாகவும் அது எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்ற விவரம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
Link Source: https://ab.co/3Fqv8S2