கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்துள்ள நிலையில் பணியாட்கள் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியா வரும் சர்வதேச மாணவர்கள் மற்றும் Backpackers ஆகியோருக்கு விசா கட்டணத்தை திரும்ப வழங்கும் நடைமுறையை அரசு உடனடியாக அமல்படுத்துவதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
சர்வதேச மாணவர்கள் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேரும், விடுமுறைக்கால வேலை விசா வைத்திருக்கும் Backpackers 23 ஆயிரத்து 500 பேரும் இன்னும் ஆஸ்திரேலியாவுக்கும் வருவதற்காக காத்திருப்பதாகவும் அவர்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களின் விசா கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம் 630 டாலர் மற்றும் விடுமுறைக்கால வேலைக்கான விசா கட்டணம் 495 டாலராக உள்ளது. நிலையில் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்வதன் மதிப்பு 55 மில்லியன் டாலர்களாக இருக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலமாக பெரும்பாலான நிறுவனங்களில் நிலவிவரும் பணியாளர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக சூழல் உருவாகும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அறிவிப்பு வெளியான நாளில் இருந்து எட்டு வாரங்களுக்குள் ஆஸ்திரேலியாவுக்கு நுழையும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசா கட்டணத்தை திரும்பப் பெறலாம் என்றும், 12 வாரங்களில் Backpackers பணியாட்கள் தங்களது விசா கட்டணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும்பாலும் திரும்பி வராத சூழலில் பல்வேறு துறைகள் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளன. தொழில் நிறுவனங்கள், சுற்றுலாத்துறை, உணவகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பொருளாதார இழப்பை எதிர்கொண்டுள்ளன. இதனை ஈடு செய்வதற்காகவே விசா கட்டணத்தை திரும்ப வழங்கும் நடவடிக்கையை ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டுள்ளது.
அதே நேரத்தில் பல்வேறு மாகாணங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படும் பட்சத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு வரும் சர்வதேச மாணவர்கள் மற்றும் பணியாட்களின் எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.
Link Source: https://ab.co/33RacFw