மெல்போர்னில் கட்டுமானம், வனம், துறைமுகம், சுரங்கம் ஆகிய ஊழியர்களின் கூட்டமைப்பான CFMEU அலுவலகத்தின் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்று அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களை மேற்கண்ட பணிகளுக்கு அனுமதிக்க வேண்டும், முடக்க நிலையை விரைந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். மேலும் சிலரை கைது செய்தும் அழைத்துச் சென்றனர். ஒரு கட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து அனைத்து கட்டுமான பணிகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாக விக்டோரியா அரசு தெரிவித்துள்ளது. மெல்போர்ன் பெருநகர பகுதிகளில் நடைபெறும் கட்டுமான பணிகள் மற்றும் எனப்படும் உள்ளுர் அரசு இடங்களான Ballarat, Geelong, Mitchell Shire மற்றும் Surf Coast Shire பகுதிகளில் நடைபெறும் அனைத்து கட்டுமான பணிகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாக விக்டோரியா மாகாண அரசு தெரிவித்துள்ளது. இரண்டு வார காலத்திற்கு குறிப்பிட்ட பகுதிகளில் முடக்க நிலை நீட்டிக்கப் படுவதாகவும், நிலைமை சீராகும் பட்சத்தில் கட்டுமான பணிகளுக்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்கு உரிய முன் அனுமதி பெற்று பணியாற்ற அனுமதி அளிப்பதாகவும், குறைந்தபட்ச தொழிலாளர்களை கொண்டு பணியாற்றும் கட்டுமான தளங்களிலும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துறைசார்ந்த ஊழியர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருத்தம் அளிக்கும் வகையில் இருந்ததாகவும், இந்தப் போக்கு தொடரும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் Tim Pallas கூறியுள்ளார்.
முடக்கநிலை உத்தரவுகளை முறையாக பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும், எந்தவிதமான புகாரும் இல்லாத பட்சத்திலேயே கட்டுமான துறைகள் இயங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் ஒரு விக்டோரிய மக்கள் கூட பாதிக்கப்படக் கூடாது என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும் அமைச்சர் Tim Pallas தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் நடைபெற்ற மோதலில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் தொடர்பாக பல்வேறு தொழிலாளர் அமைப்புகள் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் கட்டுமானம் உள்ளிட்ட துறைகள் முழுவதுமாக மூடப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று எதிர்க்கட்சிகளும் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
Link Source: shorturl.at/ovHQ1