நாடுமுழுவதும் ஈஸ்டர் கொண்டாட்டங்கள் களை கட்டி இருந்த நிலையில், மத்திய வடக்கு கடற்கரையில் அலை மிதவை பலகையில் சவாரி செய்த இருவர் சுமார் 150 கிலோ மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
ஹேட் ஹெட்-ல் உள்ள கில்லிக் கடற்கரை பகுதியில் சுமார் 4 மணி அளவில் சரடோகா பகுதியைச் சேர்ந்த 64 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கிய நிலையில் தண்ணீரில் இருந்து கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டார். மற்ற சர்ஃபர்களும், பொதுமக்களும் இணைந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். காவல்துறை மற்றும் மருத்துவ குழு வருவதற்குள் அவர்களாகவே உயிர்காக்கும் அவசர சிகிச்சையான சிபிஆர் செய்தும் பலனின்றி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. உடற்கூறாய்வு அறிக்கை வந்தபின்னரே அவரது உயரிழப்புக்கான உரிய காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக வடக்கு கடற்கரையின் மின்னி வாட்டர் பகுதியில் இருந்து பாதுகாப்பு ஹெலிகாப்டர் மூலமாக 48 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. உடனிருந்தவர்கள் சிபிஆர் செய்தும் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக கூறியுள்ளனர்.
இதனிடையே, அலை மிதவை பலகையில் சவாரி செய்வோர் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கொடிகளுக்கு உட்பட்ட பாதுகாப்பு பகுதியில் மட்டுமே மிதக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும், குறுகிய நேரத்தில் அடுத்தடுத்து இருவர் உயரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாகவும் நியூ சவுத் வேல்ஸின் சர்ஃப் லைஃப் சேவிங் அமைப்பைச் சேர்ந்த க்ரிஸ் சாமுவேல்ஸ் கூறியுள்ளார்.