இந்திய சுகாதாரத்துறை விடுத்துள்ள செய்தியில், கொரோனா வைரசின் இரண்டவாது அலை ஏற்படுத்தி உள்ள தாக்கம் குறைவதற்குள் மூன்றாவது அலை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. எனவே அதற்கு நாம் தயாராக வேண்டும் என்றும் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய ராகவன் தெரிவித்துள்ளார். வரக்கூடிய அலையின் தாக்கம் என்பது எந்த அளவுக்கு இருக்கும் என்பதை கணிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிய வகை கொரொனா வைரஸ் கண்டறிய முடியாத வகையில் இருந்தாலும் பழைய வைரசை விட இருமடங்கு அதிகமாக பரவும் தன்மை கொண்டதாக இருந்தது என்றும் விஜய ராகவன் குறிப்பிட்டுள்ளார்.
18 மாநிலங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அதில் தலைநகரான டெல்லியில் இருந்து அதிக அளவு மாதிரிகளையும், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
புதிய வகை கோரோனா வைரஸ், இரண்டு மடங்கு வீரியமானது என்பது கடந்த பிப்ரவரி மாதம் கண்டறியப்பட்டது. ஆனால், அதிலும் பல வகையான வைரஸ்கள் இருப்பது ஆந்திராவிலும், மேற்கு வங்கத்திலும் கண்டறியப்பட்டது. அவை பல மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டதும் உறுதிசெய்யப்பட்டது.
இந்தியாவில் அதன் தன்மை, பரவும் வேகம் மற்றும் மாறுதல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசின் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மைய இயக்குநர் சுஜீத் சிங் கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்திய புதிய வகை வைரசின் திரிபு அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளில் கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, புதிய வகை வைரஸ் தடுப்பூசிக்கு எதிராக எந்த அளவுக்கு வீரியமாக உள்ளது என்பதை கண்டறிய இந்தியாவில் இருந்து மாதிரிகளை லண்டனுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதனை ஏற்று இந்திய அரசும் அனுப்பி வைக்க உள்ளது.
தடுப்பூசி போடும் திட்டம் நல்ல பலனை இந்தியாவில் அளித்து வருவதாகவும், கோரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது என்றும் பயோடெக்னாலஜி துறை நிபுணர் ரேணு ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
Link Source: https://bit.ly/2RshTft