மெல்போர்னில் இருந்து பிரிஸ்பேன் மற்றும் லோகன் நகரத்திற்கு திரும்பிய இரு ஆப்பிரிக்க பெண்களுக்கு கடந்தாண்டு தொற்று கண்டறியப்பட்டது.
மெல்போர்னில் இருந்து வந்த இவர்கள் தவறான தகவலை கூறி நகருக்குள் நுழைந்ததாகவும், இவர்களால் தான் மாநிலத்தில் தொற்று பரவல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக செய்தி வெளியிட்ட கொரியர் மெயில் என்ற நாளிதழ் தன்னுடைய முகப்பு பக்கத்தில், எனிமி ஆப் த ஸ்டேட் அதாவது மாநிலத்தின் எதிரிகள் என்ற வாசகத்துடன் அவர்களின் புகைப்படத்தையும், பெயரையும் குறிப்பிட்டு வெளியிட்டது.
இது பத்திரிக்கை மரபை மீறிய செயல் என்றும், நிறவெறியின் வெளிபாடே இந்த செயலுக்கு காரணம் என்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த விவகாரம்.குறித்து குயின்ஸ்லாந்து வாழ் ஆப்பிரிக்க சங்கம் சார்பாக, ஆஸ்திரேலிய பத்திரிக்கை கவுன்சிலில் புகாரளிக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பத்திரிக்கை கவுன்சில் , கொரியர் மெயில் நாளிதழின் முகப்பு பக்கத்தில் வெளியான செய்தி, நிறவெறியை தூண்டுவதாக இல்லை என்றும் ஆப்பிரிக்க சங்கங்களின் குற்றச்சாட்டையும் நிராகரித்தன.
இந்த குற்றச்சாட்டு குறித்து ஆஸ்திரேலிய பிரஸ் கவுன்சிலுக்கு விளக்கமளித்துள்ள, கொரியர் மெயில் நாளிதழ், தங்கள் செய்திகளுக்கு பிறகு, ஆப்பிரிக்க பெண்களுக்கு கொலை மிரட்டல் வந்ததற்கு தாங்ள் பொறுப்பல்ல என்றும், இது நிறவெறி இல்லை என்றும் அந்த நாளிதழ் விளக்கமளித்துள்ளது. தவறான தகவல் கொடுத்து பிரிஸ்பேன் திரும்பிய இரு பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு தொற்றும் உறுதி செய்யப்பட்டது.
பத்திரிக்கை உரிமையின் அடிப்படையிலேயே இந்த தகவலை கொரியர் நாளிதழ் வெளியிட்டதாகவும், நிறவெறியோ அல்லது விதி மீறிய செயலோ கிடையாது என்று ஆஸ்திரேலிய பிரஸ் கவுன்சில் விளக்கமளித்துள்ளது. இந்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள குயின்ஸ்லாந்து வாழ் ஆப்பிரிக்க சமூதாய சங்கம், ஒருவரை நிறத்தின் காரணமாக விரோதியாக சித்தரிக்கும் போக்கை எவ்வாறு ஒதுக்கி தள்ள முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர். இது போன்ற முடிவுகள், அமைப்புகளின் மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைப்பதாக அமையும் என்று அந்த சங்கத்தை சேர்ந்த பென்னி போல் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரததில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பவில்லை என்றும், நேரம் விரையம் ஆனது தான் மிச்சம் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
தவறான தகவலை கொடுத்து பிரிஸ்பேனுக்குள் நுழைந்த இரு பெண்கள் மீது நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், அவர்கள் இருவருக்கும் தலா $13,600 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Link Source: https://bit.ly/3zWkCig