Breaking News

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை எதிர்கொள்ள முன்னேற்பாடுகளை செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் இரண்டாம் அலையின் தீவிரம் சற்று குறைந்துள்ளது.

கடந்த மே மாதத்தில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவான தொற்று எண்ணிக்கை தற்போது 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.

மூன்றாம் அலை பரவல் குறித்து மாறுபட்ட கருத்துகள் ஆராய்ச்சியாளர்களிடம் நிலவி வருகிறது. இந்நிலையில் மூன்றாம் அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததற்கு இணங்க, இன்று வரை 353 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.

Rs 100 crore to make preparations to face the third wave of corona in Tamil Nadu.முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறே, இதுவரை பெறப்பட்டுள்ள நிதியிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும், முதற்கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிடவும், இரண்டாவது கட்டமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாள்தோறும் 1.6 லட்சம் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில்கொண்டு, இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆர்டி-பிசிஆர் கிட்-களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை வழங்கிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.

இதனையடுத்து, சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயினையும், கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு 25 கோடி ரூபாயினையும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டிருந்தார்.

தற்போது முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், இந்தத் தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.