சாலமன் தீவுகள் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹோனியறாவில், அந்நாட்டின் பிரதமர் மனசே சோகவரே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தங்களுடைய நாட்டுக்கான வளர்ச்சியில் சீனா முக்கிய அங்கம் வகிக்கிறது. அதற்காக சீனாவுக்கு நன்றி என்று கூறினார். அதேசமயத்தில் சாலமன் தீவுக்கு உதவி தேவைப்படும் போது, அருகாமையிலுள்ள வேறு எந்த நாடும் உதவ முன்வரவில்லை என்று ஆஸ்திரேலியாவின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்தார். அப்போது அந்த கூட்டத்தில் சீனா தூதரும் ஆஸ்திரேலிய தூதரும் அருகருகே அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சாலமன் தீவுகள் பிரதமர் சோகவரே, தொடர்ந்து தன்னுடைய பேச்சில் பெயரைக் குறிப்பிடாமல் ஆஸ்திரேலியாவை விமர்சனம் செய்துகொண்டே இருந்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய செய்தியாளர் ஒருவர், பிரதமர் சோகவரே உரையை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். உடனடியாக பிரதமரின் பாதுகாப்பு அலுவலர்கள் அந்த செய்தியாளரை விழாக்கூட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.