Hawkesbury ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.10 மணிக்கு படகு ஒன்று வெடித்ததாகவும், அதில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு வந்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த NSW அவசர ஊர்தி ஆய்வாளர் David Morris காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்து உடனடியாக Royal North Shore மருத்துவமனைக்கும் , Westmead மருத்துவமனையிலும் அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்த ஆய்வாளர் David Morris, படகில் 8 பேர் இருந்ததாக தெரிவித்தார்.அதில் 6 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
படகின் முன்பகுதியில் இருந்த 2 வயது குழந்தைக்கும், தாய்க்கும் நல்வாய்ப்பாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்தை நேரில் பார்த்தவர், தாயும் குழந்தையும் நூலிழையும் உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளார்.
விபத்து ஏற்பட்டவுடன் அப்பகுதியில் இருந்த உள்ளூர் வாசிகள் துரிதமாக செயல்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
வெடிவிபத்துக்குள்ளான படகு ,பெட்ரோல் நிரப்பும் இடத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்ததாகவும், உள்ளூர் வாசிகள் விபத்து ஏற்பட்டவுடன் படகை ஆற்றுக்குள் தள்ளியதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் தீயணைப்பு துறை அதிகாரி Grant Wargen தெரிவித்துள்ளார்.
படுகாயமடைந்த 27 வயது பெண் ஒருவருக்கு 60% தீக்காயம் ஏற்பட்டுள்ளதகவும், மற்றொரு 25 வயது பெண்ணுக்கு 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவுன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் Concord Repatriation General Hospital மருத்துவமனையில் உள்ள தீப்புண் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
படகு வெடித்ததற்கான காரணம் குறித்து NSW தீயணைப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.