சமீபத்தில் குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகளவில் மொத்தம் 75 நாடுகளில் 16 ஆயிரம் பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் 40 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதை தடுக்க 2 தடுப்பூசிகள் இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் ACAM2000 ரக தடுப்பூசி மட்டும் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் இந்த தடுப்பூசி எச்.ஐ.வி போன்ற நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகளுக்கு ஆபத்தானதாக கூறப்படுகிறது. இதையடுத்து நோய் பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டும், இந்த தடுப்பூசி செலுத்துமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதற்கிடையில் மத்திய அரசின் சுகாதாரத் துறைக்கான வழக்கறிஞர்கள் குழு, குரங்கமைக்கு போடப்படும் எம்.வி.ஏ தடுப்பூசியை ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு அமைப்பும் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்க ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் குறிப்பிட்ட தடுப்பூசிக்கு அனுமதி வழங்க காலதாமதமாகும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.