மது போதை மயக்கம், பணவீக்கத்தை கண்டுகொள்ளாமல் இருந்தது, குற்றச்செயல் புரிந்தவர்களுக்கு பதவி கொடுத்து ஆதரித்தது உள்ளிட்ட அடுத்தடுத்த சர்ச்சைகளால் பிரிட்டன் நாட்டு பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். மேலும் அவர் வகித்து வந்த பழமைவாத கட்சித் தலைவர் பதவியையும் விட்டு விலகினார்.
கடந்த மாதம் 6-ம் தேதி போரின்ஸ் ஜான்சன் தலைமையிலான அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை கூறி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் 59 சதவீத வாக்குகளை பெற்று போரிஸ் தனது பதவியையும் ஆட்சியையும் தக்கவைத்துக் கொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களிலே உட்கட்சி பூசல் தலைத்தூக்க, அவருடைய அதிகாரம் செல்லுபடியாகாமல் போனது.
இதையடுத்து போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று கூறி, நிதியமைச்சராக பதவி வகித்த ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சராக இருந்த சாஜித் ஜாவித் இருவரும் பதவி விலகினர். அவர்களை தொடர்ந்து மேலும் 50-க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
இதனால் எழுந்த தொடர் அழுத்தம் காரணமாக பிரதமர் பதவியை விட்டு விலகினார் போரிஸ் ஜான்சன். இந்நிலையில் அடுத்த பிரிட்டன் பிரதமர் யார் மற்றும் பழமைவாத கட்சியின் தலைவர் யார் என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. உலகமே உற்றுநோக்கும் விவகாரமாக இங்கிலாந்து அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக் பழமைவாத கட்சியின் தலைவராவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இவர் உட்கட்சிக்குள் நல்ல செல்வாக்கு பெற்ற தலைவராக மாறியுள்ளார். அதனால் ரிஷி சுனக் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்ட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து ப்ராம்ஸ்க்ரோவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் ஜாவித்துக்கு தலைமை பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து வந்த இவருடைய குடும்பம், எளிமையான பின்னணி கொண்டது. இவருக்கும் கட்சிக்குள்ளும் மக்களிடையே செல்வாக்கு இருப்பதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்விரு நபர்களை தொடர்ந்து முன்னாள் வெளியுறவு செயலாராகவும் இருந்த ஜெர்மி ஹண்ட், பிபிசியின் முன்னாள் செய்தியாளர் மற்றும் டைம்ஸ் நாளிதழின் கட்டுரையாளரான மைக்கேல் கோவ் உள்ளிட்டோரும் பழமைவாத கட்சியின் அடுத்த தலைவருக்கான போட்டியில் உள்ளனர்.