மெல்பேர்னைச் சேர்ந்த கனரக வாகன ஓட்டுநரான மேத்யூ லிவ்விங்க்ஸ்டன் (43) டிசம்பர் 3, 2021 அன்று வடமேற்கு மெல்பேர்ன் சாலையில் கனரக வாகனத்தை ஓட்டிச் சென்றார். கட்டுப்பாட்டை இழந்த அவருடைய வாகனம், சாலையில் சென்றுகொண்டிருந்த பல்வேறு வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் கைக்குழந்தை ஒன்று உயிரிழந்தது. குழந்தையின் பெற்றோர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், ஓட்டுநர் மேத்யூ லிவ்விங்க்ஸ்டனை கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை மெல்பேர்னின் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, மேத்யூ லிவ்விங்க்ஸ்டனின் மீதான குற்றத்தை உறுதிசெய்தார். தற்போது பிணையில் உள்ள அவருக்கான தண்டனை விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.
அதற்கு முன்பாக சில தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி விக்டோரியா மாநிலத்தை விட்டு காவல்துறை அனுமதியில்லாமல் மேத்யூ லிவ்விங்க்ஸ்டன் வெளியேற முடியாது, ஆஸ்திரேலியாவையும் அவர் விட்டு வெளியேற முடியாது, எந்தவிதமான வாகனங்களையும் அவர் ஓட்டக்கூடாது மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சிகளை சந்திக்கக்கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை நீதிமன்றம் அறிவித்துள்ளது.