Breaking News

விக்டோரியா மாநிலத்தின் மக்கள் தொகை விபரம்..!!

கடந்த 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 5.9 மில்லியனாக இருந்த விக்டோரிய மாநில மக்கள்தொகை 9.2 சதவீதம் அதிகரித்து 2021-ம் ஆண்டில் 6.5 மில்லியனாக உயர்ந்துள்ளது

Population Information of Victoria State

ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் 2021-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் விக்டோரியா மாநிலத்தின் மக்கள்தொகை சார்ந்த தகவல்கள் விரிவாக பார்க்கலாம்.

கடந்த 1971-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது, விக்டோரியாவில் 27 வயதுடையோர் அதிகளவில் வசித்தனர். தற்போதைய கணக்கெடுப்பில் 38 வயதை கடந்தவர்கள் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 1.0 சதவீதம் பழங்குடியினத்தவர் விக்டோரியாவில் வாழ்கின்றனர். அவர்களுடைய எண்ணிக்கை 66,000-ஆக உள்ளது.

விக்டோரியாவில் வசிப்பவர்களில் 65 சதவீதம் பேர் அங்கேயே பிறந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களை தொடர்ந்து இந்தியாவில் பிறந்த 4 சதவீதம் பேரும், இங்கிலாந்தில் பிறந்த 2.7 சதவீதம் பேரும், சீனாவில் பிறந்த 2.6 சதவீத மக்களும் நியூசிலாந்தில் பிறந்த 1.5 சதவீதத்தினரும் தற்போது விக்டோரியாவில் நிரந்தரமாக குடியேறியுள்ளனர்.

மொத்தம் 67.2 சதவீதம் விக்டோரியா வாசிகள் தங்களுடைய வீடுகளில் ஆங்கிலம் பேசுகின்றனர். அதை தொடர்ந்து மேண்ட்ரின், வியாட்நாமீஸ், கிரீஸ் உள்ளிட்ட மொழிகளை விக்டோரிய மக்கள் தங்களுடைய வீடுகளில் பேசுகின்றனர். இந்த வரிசையில் இந்தியாவின் பஞ்சாபி மொழியை பேசுவோரின் எண்ணிக்கை 1.6 சதவீதமாக உள்ளது.

சராசரியாக விக்டோரியாவில் வசிக்கும் தனிநபர் ஒருவருடைய வார வருமானம் 803 டாலர்களாக உள்ளது. ஒரு வாரத்தின் முடிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 2136 டாலர் வரை வருமானமீட்டுகின்றனர். கடந்த 2016 கணக்கெடுப்பின் போது விக்டோரியாவில் தனிநபருடைய வார வருமானம் 644 டாலராகவும், ஒரு குடும்பத்தின் வார வருமானம் 1715 டாலராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.