ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர் தமிழ் குடும்பமான பிரியா நடேசலிங்கம் குடும்பத்திற்கு விசா வழங்கி அவர்கள் மீண்டும் மத்திய குயின்ஸ்லாந்து பகுதியில் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர்கள் ஏற்கனவே நீண்டகாலம் தடுப்புக்காவலில் இருந்துவிட்டதாகவும், இந்நிலையில் சிறுமி கடுமையான ரத்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட தமிழ் குடும்பம் மீண்டும் பிலோலா தீவில் குடியேற அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இதுபோன்ற புலம்பெயர் குடும்பங்களை குடியேற அனுமதிப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று மற்ற கட்சி எம்பிக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான காரசார விவாதம் நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் தொடர்ந்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மருத்துவத் துறை சார்பில் சம்பந்தப்பட்ட வெளியுறவுத்துறை மற்றும் குடியேற்ற துறை அமைச்சர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு புலம்பெயர் தமிழ் குடும்பத்திற்கு உரிய தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசியக் கட்சி எம்பி Anne Webster கூறுகையில் இந்த விவகாரத்தில் அவசரமான முடிவு சரியானது அல்ல என்றும் ஒரு சூழலுக்காக கொள்கையை மாற்றுவது என்பது இனிவரும் காலங்களில் தவறான உதாரணமாக மாறி விடும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை மருத்துவர்கள் இந்த குடும்பம் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்றும் அதுவே அவர்களுக்கான தற்போதைய தேவை என்றும் தெரிவித்துள்ளனர். அதற்கான முயற்சிகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்களை மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே சிறுமியை தாருனிகா குடும்பத்திற்கு ஆதரவாக ஏராளமானோர் சிறுமி சிகிச்சை பெற்று வரும் பெர்த் குழந்தைகள் மருத்துவமனைக்கு வெளியே கூடி தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். தடுப்புக்காவலில் உள்ள குடும்பத்தை மீண்டும் அவர்கள் இருந்த இடத்திலேயே குடியேற்றம் செய்ய வேண்டும் என்று அவர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் குடும்பத்திற்கு குடியேற்ற அனுமதியை வழங்க வேண்டும் என்றும் பிரியா நடேசன் தம்பதியின் நண்பர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Link Source: https://ab.co/2SA3KNX