Breaking News

விக்டோரியாவுக்கு கூடுதலாக ஒரு லட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் : அடுத்த வாரம் வழங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

தொற்றுப் பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி போடும் பணிகளை ஆஸ்திரேலியாவின் அனைத்து மாகாணங்களும் முடுக்கிவிட்டுள்ளன. அந்தவகையில் விக்டோரியாவில் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த மத்திய அரசு கூடுதலாக டோஸ்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து ஒரு லட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் விக்டோரியாவுக்கு வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார்.

ஜூன் 14-ம் தேதியில் இருந்து அடுத்த மூன்று வாரத்திற்கு மூன்று கட்டங்களாக ஒரு லட்சம் ஃபைசர் தடுப்பூசிகளை விக்டோரியாவுக்கு வழங்கப்படும் என்றும், இதன் மூலம் 50 ஆயிரம் பேர் பலன் அடைவார்கள் என்றும் கிரேக் ஹன்ட் கூறியுள்ளார். விக்டோரியாவில் உரிய முறையில் தடுப்பூசி நடவடிக்கைகளை செயல்படுத்துவது போன்றே மற்ற மாகாணங்களும் யூனியன் பிரதேசங்களும் தொடர்ந்து தடுப்பூசி நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதுவே மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

One lakh Pfizer vaccines to be given to Victoria. Australian Health Minister.அதேநேரத்தில் அடுத்தடுத்த வாரங்களில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை கூடுதலாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், முதலில் 1 லட்சத்து 15 ஆயிரமாகவும், அதற்கடுத்த வாரம் 2 லட்சத்து 30 ஆயிரம் எனவும் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக Greg Hunt கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் அடுத்த ஒரு வாரத்தில் ஏழு லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும், இது பெருந்தொற்று காலத்தில் எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று என்றும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். விக்டோரியாவுக்கு தருவதாக உறுதி அளித்து உள்ள தடுப்பூசிகளை மத்திய அரசு படிப்படியாக வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

விக்டோரியாவில் 70 வயதினரில் 58 சதவீதம் பேருக்கும், 50 வயதினரில் 42 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி போட்டு முடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவை ஆஸ்திரேலிய மருத்துவக் கூட்டமைப்பின் விக்டோரிய தலைவர் Roderick McRae வரவேற்றுள்ளார். தடுப்பூசி நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனைகள் செய்து கொண்டு அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பது என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் Roderick McRae குறிப்பிட்டுள்ளார்.

Link Source: https://ab.co/3x3mdkA