மேற்கு ஆஸ்திரேலியாவில் மைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அது மாகாணத்தின் நடவடிக்கைகளை முடக்கும் வண்ணம் மாறி இருப்பதாக ப்ரீமியர் Mark McGowan கவலை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி மற்ற நாடுகளுக்கான எல்லைகள் மற்றும் மாகாண எல்லைகளை திறப்பது தொடர்பாக நடவடிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
மாகாண தலைமை சுகாதார அதிகாரியுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எல்லைகளை திறப்பது சரியான நடவடிக்கை அல்ல என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் ப்ரீமியர் Mark McGowan குறிப்பிட்டுள்ளார். எல்லைகளை திறப்பது தொடர்பான புதிய தேதி அடுத்த மாதத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் குறிப்பிட்ட காரணங்களுக்காக உரிய அனுமதி பெற்று மேற்கு ஆஸ்திரேலியா வரவிருக்கும் பயணிகளுக்கு மட்டும் பிப்ரவரி 5 முதல் அனுமதி வழங்கப்படும் என்றும், அதே நேரத்தில் அவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ப்ரீமியர் Mark McGowan தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ் பாதிப்பின் அடிப்படையில் நாம் பல்வேறு முடிவுகளை மேற்கொண்டிருந்த நிலையில் ஒமைக்ரான் தொற்று மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், முதலில் நாம் கண்களை மூடிக்கொண்டு முடிவுகளை மேற்கொள்வது பாதிப்புகளை இன்னும் தீவிரப்படுத்தும் என்றும் ப்ரீமியர் Mark McGowan குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் மைக்ரான் பாதிப்பின் தாக்கம் எல்லைகளை திறக்கும் முடிவை நீண்டகாலம் தள்ளிப்போட வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எல்லைகளை திறப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து தான் மன்னிப்பு கோருவதாகவும் இந்த நிலையில் மக்களை பாதுகாப்பது ஒன்றே முக்கியமான நோக்கம் என்றும் பிரீமியர் கூறியுள்ளார். அதே நேரத்தில் தகுதி வாய்ந்தவர்கள் உடனடியாக மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தலைமை சுகாதார அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு வருவதாகவும் இதன் மூலம் உயிரிழப்புகளை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கு ஆஸ்திரேலிய அரசு உரிய முறையில் மேற்கொள்ளும் என்றும் தலைமை சுகாதார அதிகாரி கூறியுள்ளார். தொற்று பாதிப்பு காரணமாக சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் கடுமையான பாதிப்பை சந்தித்து இருப்பதாகவும் இதில் இருந்து மீண்டு வருவதற்கு உரிய கால அவகாசம் தேவைப்படும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Link Source: https://ab.co/3KsOw3r