இந்தியாவில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழகமும் முன்னிலை பெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒரு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 03ம் தேதியான திங்களன்று 20 ஆயிரத்து 952 ஆக உள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 28 ஆயிரத்து 64 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 150 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 52 ஆயிரத்து 60 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 122 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 46 பேர் தனியார் மருத்துவமனையிலும், 76 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 468 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், 18 ஆயிரத்து 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 90 ஆயிரத்து 338 ஆக உள்ளது. ஒரே நாளில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 16 பேருக்கு கொரேனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்வர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 26 லட்சத்து 96 ஆயிரத்து 851 ஆக உள்ளது. தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 258 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசுக்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் சவால் முக்கியமானதாக உள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஸ்டாலினிடம் எடுத்துரைத்தனர். அப்போது, ரெம்டிசிவர் உள்ளிட்ட மருந்துகள் தட்டுப்பாடின்றி அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆக்சிஜன், படுக்கை தட்டுப்பாடுகள் இன்றி அனைவருக்கும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.