Breaking News

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண செனட்டர் ஜிம் மோலன் தான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

Senator Molan

முன்னாள் மேஜர் ஜெனரலும், செனட்டருமான ஜிம் மோலன் ட்விட்டர் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த வாரம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் தான் புற்றுநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். செனட்டிலிருந்து விலகி புற்றுநோய்க்கான சிகிச்சை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தான் விலகி இருக்கும் சிலகாலம் தன்னுடைய அலுவலகம் முழுமையாக இயங்கும் என்றும், தன்னுடைய குழுவினர் தங்களது கடும் உழைப்பை அரசுக்கு செலுத்துவார்கள் என்றும் அறிக்கையில் மோலன் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மக்களுக்காக தான் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற தயாராக இருக்கிறேன் என்பதில் எந்தவித தயக்கமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் செய்தி உங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கலாம். ஆனால், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட பல காரணங்கள் இருப்பதாகவும், மருத்துவர்கள் முடிந்தவரை தன்னை அக்கறையுடன் கவனித்துக் கொள்வதாகவும் ஜிம் மோலன் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய குடும்பத்தின் அன்பு, அக்கறை, பிரார்த்தனை இவை யாவும் தனக்கு இருப்பதால் தான் ஒரு போதும் நோயைக்கண்டு அஞ்சுவதில்லை என்றும் மோலன் கூறியுள்ளார்.

Senator Molan australia40 ஆண்டு காலம் ராணுவத்தில் பணியாற்றிய மோலன், மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். ஈராக் போரின் போது முக்கியப் பொறுப்பு வகித்த ஜிம் மோலன், இந்தோனேசியா மற்றும் கிழக்கு திமோரில் சிறந்த சேவையாற்றியதற்காக விருது பெற்றுள்ளார். பின்னர் நீண்ட காலம் அரசியலில் ஈடுபட்ட அவர் செனட் சபையின் லிபரல் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

70 வயதான ஜிம் மோலன் சிகிச்சை மேற்கொண்டு விரைவில் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.