நாடு முழுவதும் பரவலாக தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அவசர தேசிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தொற்று பரவல் கட்டுப்பாடு ஊரடங்கு தடுப்பூசி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் மற்றும் பணிக்குச் செல்லும் ஊழியர்கள் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிக பாதிப்பில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண தலைவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீண்டும் வெள்ளிக்கிழமை கூடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தொற்று பரவும் அபாயத்தில் உள்ளவர்கள் மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இதில் சுய வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதில் பெரும்பாலும் பல்வேறு இடங்களுக்கு சென்று வரும் ஓட்டுனர்கள் மற்றும் முதியோர் பராமரிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விமான நிலைய வாகன ஓட்டுனர் ஒருவருக்கு சுற்று பரவியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாத மத்தியில் ஓட்டுனர்கள், முதியோர் பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் இதற்கு மாகாண அரசுகள் விரைந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். முதியோர் பராமரிப்பாளர்களுக்கான தடுப்பூசிக்காக 11 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், பக்க விளைவுகளால் பாதிக்கப்படுவோருக்கு விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பயணம் மேற்கொண்டு தனிமைப்படுத்துதல் உள்ளோர் மற்றும் அவருடைய தொடர்பு பட்டியலில் உள்ளோர் அனைவரும் தனிமைப்படுத்துதல் முடிந்த பின்னர் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், நெகட்டிவ் என முடிவு வந்த பின்னரே அவர்கள் மேற்கொண்டு பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று 40 வயதுக்கு உட்பட்டோருக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என்றும், இதற்கான அனுமதியை சுகாதாரத்துறை வழங்கியுள்ளதாகவும் அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு போடப்படும் இந்த தடுப்பூசி தற்போது 40 வயதுக்கு உட்பட்டு இருக்கும் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3hkQ5mg