கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குயின்ஸ்லாந்து துணை முதல்வர் ஸ்டீவன் மைல்ஸ், மாகாணத்தில் புதிதாக 16 பேருக்கும், கிளாட்ஸ்டோன் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் 11 பேரிடமும் தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தொற்று பாதித்த 16 பேரும் பிரிஸ்பேன் உயர்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட தொற்றுபரவலில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதால் இவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவியிருக்க வாய்ப்பு மிகக்குறைவு என்று துணை முதல்வர் ஸ்டீவன் மைல்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுவரை இப்பள்ளியை சேர்ந்தவர்கள் 79 பேருக்கு தொற்று பாதித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டாக்டர் யங், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிகையில் குயின்ஸ்லாந்து சரியான திசையில் பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் பட்சத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் குயின்ஸ்லாந்து மாகாணத்துக்கு கூடுதலாக 1,12,320 டோஸ் பைசர் தடுப்பூசிகள் வந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் Yvette D’Ath தெரிவித்துள்ளார்.
இதனை விரைவில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 52,000 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சிறுவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச நாடுகள் இந்த சூழலை எவ்வாறு கையாண்டது என்பதை ஆஸ்திரேலிய மருத்துவதுறையினர் ஆராய்ந்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்றும் இந்த பேரிடரில் இருந்து தங்களின் அரசு ஆஸ்திரேலியர்களை மீட்கும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3yFjAqg