ஆஸ்திரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் வார இறுதி நாட்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தின் வடக்கு பகுதியில் அனல் காற்று வீசும் என்றும், தெற்கு பகுதியில் குளிர் காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த வானிலை ஆய்வாளர் ஜாக்சன் பிரொளனி, ஈரப்பதம் மிகுந்த காற்று, விக்டோரியாவின் பெரும்பாலான பகுதிகளில் கன மழையை ஏற்படுத்தும் என்றும், தெரிவித்துள்ளார்.
15 மிமீ முதல் 25 மிமீ வரை இந்த மழையளவு இருக்கும் என்று தெரிவிக்கும் வானிலை ஆய்வாளர்கள் ,அடுத்த 8 நாட்கள் வரை இந்த நிலை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெரும்பாலான நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தின் மெக்கே பகுதியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த செய்தி கடும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டவுன்ஸ்வில்லி பகுதியில் சராசரியை விட வெப்ப நிலை 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும், அனல் காற்று வீசுவதால் மக்கள் போதுமான முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே புயல், வெள்ளம் போன்ற பாதிப்புகளில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய மக்களுக்கு, இந்த எச்சரிக்கைகள் மேலும் கவலையளிப்பதாக இருந்தாலும், பாதுகாப்பு கருதி மக்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
Link Source: https://ab.co/3tsp3j2