ஆஸ்திரேலியாவின் டோனி கோட்லின் (33) அங்குள்ள தங்கச் சுரங்கத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்து காரணமாக நெஞ்சுப் பகுதியில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. அதில் அவருடைய நுரையீறல் பகுதியில் ஏதோ பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். அது புற்றுநோயாக இருக்கலாம் என்று அவர்கள் அனுமானித்துள்ளனர். ஆனால் சோதனை செய்து பார்த்ததில் அது சிலிக்காஸிஸ் என்கிற பாதிப்பு என்று தெரியவந்துள்ளது.
உயிர்கொல்லியான கிறிஸ்டாலின் சிலிக்கா என்கிற துகள் உடலுக்குள் சென்றால் ஏற்படக்கூடிய பாதிப்பு தான் சிலிக்காஸிஸ். இது குணப்படுத்த முடியாத வியாதி என்று மருத்துவ உலகம் கூறுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதிக தூரம் நடக்க முடியாது, பேச முடியாது, ஓடவும் முடியாது. அதேபோன்று மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு செல்ல முடியாது, அதிக எடையுள்ள பொருட்களை தூக்க இயலாது. இந்த நோய் அவர்களை அப்படியே முடக்கிவிடும் தன்மை கொண்டது.
டோனி கோட்லின் மட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் சிலிக்காஸிஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை 500 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இது தெரியவந்துள்ள எண்ணிக்கை மட்டுமே, தெரியாமல் இன்னும் பலருக்கு இந்த பாதிப்பு இருக்கும் என்று ஆஸ்திரேலியா மருத்துவத்துறை கூறுகிறது. சுரங்கப் பணியாளர்கள், குவாரியில் பணியாற்றுபவர்கள், கட்டிட வேலை மற்றும் தொழிற்சாலைகளில் வேலைசெய்பவர்களுக்கு எளிதாக இந்த பிரச்னை ஏற்படக்கூடும்.
இதனால் தொழிலாளர்கள் நலன் மீது, ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு அக்கறை காட்ட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ நடவடிக்கைகளை அரசு உருவாக்கிட வேண்டும். மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து செயல்பட்டால் இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காணலாம். இந்த பிரச்னையை தீர்க்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.