மெல்பேர்னின் வடமேற்குப் பகுதியிலுள்ள மெல்ரோஸ் டிரைவ் என்னும் இடத்தில் பி-டிரக் ரக கனரக சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த விக்டோரியா மாநில தீயணைப்புத்துறை வீரர்கள், இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட கனரக வாகன ஓட்டுநரை பத்திரமாக மீட்டனர். மேலும் சாலையில் கவிழ்ந்து கிடந்த வாகனத்தையும் அப்புறப்படுத்தினர்.
இதுதொடர்பாக பேசிய விக்டோரியா காவல்துறையின் மூத்த பாதுகாப்பு காவல் பிரிவு அதிகாரி ஜேசன் கானர், விபத்துக்குள்ளான வாகனத்தை ஓட்டு வந்தவரின் பெயர் மெர்னடா மேன் (41) என்று தெரியவந்துள்ளது. சிறு காயங்களுடன் அவர் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவச் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட பெரும் விபத்தில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தது ஆச்சரியமாக உள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், விபத்துக்குள்ளான கனரக சரக்கு வாகனத்தில் 40 டன் அளவு விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி இருந்துள்ளது. அவை அனைத்தும் தற்போது நிலப்பரப்பில் கொட்டிவிட்டது. இதனால் ரசாயான மாறுபாடு ஏற்பட்டு நச்சுப் புகை வெளியேறக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகாமையிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், மேற்கு விமானப் பகுதி, கிளாடுஸ்டோன் பூங்கா, கவான்ப்ரே, ஸ்டார்த்மோர் ஹைய்ட்ஸ் மற்றும் துல்மெரைன் போன்ற இடங்களில் வசிப்பவர்கள் கவனமாக இருக்கவும். குறிப்பிட்ட பகுதிகளில் யாருக்கேனும் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று காவல் அதிகாரி ஜேசன் கானர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.