இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பருவநிலை மாற்றம், கொரொனா கட்டுப்பாடு, சர்வதேச பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பருவநிலை மாற்றம் காரணமாக ஜெர்மனி சீனா போன்ற நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது அதே போன்று கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விவாதிக்கையில் உலகை அச்சுறுத்தும் புவி வெப்பமயமாதலை குறைக்கும் நடவடிக்கையை ஜி20 நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், 2015 பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அளவை விட 1.5 சதவீதம் அளவுக்கு குறைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
சர்வதேச அளவில் பருவநிலை மாற்றம் தொடர்பான அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் பொருளாதாரத்தில் உச்சத்தில் இருக்கும் ஜி20 நாடுகளின் இந்த முடிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் 80 சதவீத கார்பன் உமிழ்வு ஜி20 நாடுகளில் இருந்தே வெளியாகிறது என்றும் இதனைக் கட்டுப்படுத்த மேற்கண்ட ஒப்பந்தம் உதவி புரியும் என்று கூறப்படுகிறது. 1.5 சதவீதம் அளவுக்கு புவி வெப்பமயமாதலை குறைக்க சில நாடுகள் ஒப்புக் கொள்ளாத நிலையில் ஒப்பந்தங்களில் மாற்றம் கொண்டு வந்த பின்னரே ஜி20 நாடுகள் ஒரு சேர சம்மதம் தெரிவித்துள்ளன.
ஜி20 மாநாட்டில் பருவநிலை மாற்றம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் கிளாஸ்கோ பருவநிலையை மாநாட்டில் நேரடியாக எதிரொலிக்கும் என்றும், எனவே இங்கு எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் அதில் முக்கியமானவை என்று இத்தாலி பிரதமர் மரியோ டிரகி தெரிவித்துள்ளார்.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை போல நீண்ட கால இலக்குகள் நமக்குத் தேவை என்றும், ஆனால் தற்போதுள்ள சவால்களை எதிர்கொள்ள குறைந்த கால இலக்குகளை நிர்ணயித்து செயல்படுத்த வேண்டும் என்றும் மரியோ டிரகி கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் நேரடியாக மாநாட்டில் பங்கேற்ற நிலையில் ஜப்பான், சீனா, ரஷ்யா தலைவர்கள் காணொளி வாயிலாக ஜி-20 மாநாட்டில் பங்கேற்றனர்.
Link Source: shorturl.at/uQR09