மத்திய ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் வன்முறைகள் தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் Tony Deutrom மற்றும் மூத்த காவல்துறை அதிகாரி Sergeant Kirsten Engels ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். மத்திய ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் குடும்ப கட்டமைப்புகள் செயலிழந்து போனதே வன்முறைகள் அதிகரிக்க காரணம் என்றும் இது கடந்த ஓராண்டில் பலமடங்கு அதிகரித்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே வெளிவந்த புள்ளிவிபரங்கள் கடுமையான தோற்றத்தை ஏற்படுத்திய நிலையில் ஒவ்வொரு பிரிவுக்குமான சிறப்பு தடுப்பு பிரிவு அளித்துள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த வகையில் 2020 ஆகஸ்ட் முதல் 2021 ஆகஸ்ட் வரையிலான ஓராண்டில் Alice Springs பகுதியில் சொத்து தொடர்பான வன்முறைகள் 60% வரை அதிகரித்துள்ளதாகவும், Tennant Creek பகுதியில் 54 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாகவும் காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Alice Springs பகுதியில் ஓராண்டில் குடும்ப வன்முறைகள் 16 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும், வாகன திருட்டு 22 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.
மத்திய ஆஸ்திரேலியாவின் குறிப்பிட்ட பகுதிகளில் காவல் துறையின் தடுப்பு பிரிவு இருந்தபோதிலும் இதுபோன்ற வன்முறை சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும், அவர்கள் இல்லாமல் போயிருந்தால் இந்த எண்ணிக்கை மிகவும் கொடூரமானதாக அதிகரித்திருக்கும் என்றும் காவல் கண்காணிப்பாளர் Tony Deutrom அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதேபோன்று Tennant Creek பகுதியில் மது போதை மூலமாக ஏற்பட்ட வன்முறைகள் 37 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாகவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து இருப்பது புள்ளிவிபரங்கள் வாயிலாக தெரிய வந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க வேண்டியது காவல்துறையின் முழுமையான பொறுப்பு என்றும் தற்போதைய சூழலில் சிறைகள் நிரம்பி இருப்பதாகவும், சிறார் சீர்திருத்தப் பள்ளிகள் நிரம்பி இருப்பதாகவும், சமூகத்தின் குடும்ப கட்டமைப்பு பலமடங்கு சீரழிந்து இருப்பதாகவும் வல்லுநர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டிய பொறுப்பும் காவல்துறைக்கு இருப்பதாகவும், அதே நேரத்தில் அதிகரித்து வரும் வன்முறை கட்டுப்படுத்தும் நோக்கில் உரிய நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3lY21hu