தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவத்தொடங்கிய நிலையில், ஜூன், ஜூலை மாதங்களில் தொற்று பரவல் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது. தினசரி உயிரிழப்புகளும் அதிகரிக்கத்தொடங்கியது. பிறகு மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
2021 தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 500 க்கும் குறைவான பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக தொற்று எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
முதல் அலையை விட 2 வது அலை அதிவேகமாக பரவி வருகிறது.
சென்னையில் தொற்று பரவலின் வேகம் தீவிரமாக உள்ளது. சென்னையில் மட்டும் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போதைய நிலையில் சென்னையில் 30 ஆயிரம் பேர் உட்பட 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இதில், 30 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டதால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையங்களில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த கண்காணிப்பு மையங்களில் படுக்கைகள் தவிர அவசர சிகிச்சை வழங்க எந்த வசதியும் இல்லை என்பதால்,
திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு உரிய அவசர சிகிச்சைகளை கொடுக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது
தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் 32,807 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 21,535 படுக்கைகள் என 54,342 படுக்கைகள் உள்ளன. இதில் 25,386 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதிகள் உள்ளன.
தமிழகத்தை பொருத்தவரையில் அரசு மருத்துவமனைகளில் பெரிய அளவிலான உட்கட்டமைப்பு வசதி உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு படுக்கைக்கும் குழாய் வழியாக ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்த முடியும். மருத்துவமனைகளில் படுக்கை வசதி கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான வசதிகளும் உள்ளன.தற்போதைய சூழலில் 70 சதவீதம் படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கரோனா கண்காணிப்பு மையங்களில் 35 ஆயிரம் படுக்கைள் உள்ளன. தொற்று பரவல் வேகம் காரணமாக இந்த எண்ணிக்கையை 80 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.