ஆஸ்திரேலியாவில் Covid – 19க்கு எதிராக Pfizer-BioNTech தடுப்பூசி போடும் பணி , வரும் பிப்ரவரி மாதத்தில் தொடங்கி ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டமாக முன்னணி சுகாதார பணியாளர்களுக்கும், தொற்று வெளிப்படும் நோயாளிகளுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வெளிநாட்டிலிருந்து திரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். இதில் சுமார் 678,000 பேர் அடங்குவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்டமாக 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும், பழங்குடியினர் மற்றும் Torres Strait Islander பகுதிகளில் உள்ள 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அதிக முன்னணி தொழிலாளர்களுக்கும், குறைபாடுகள் உள்ளவர்களுக்கும், பொது சுகாதார ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். மேலும் பாதுகாப்பு பணியாளர்கள், காவல்துறை, தீயணைப்பு துறை, அவசர சேவை ஊழியர்கள் மற்றும் இறைச்சி பதப்படும் தொழிலாளர்கள், high-risk தொழிலாளர்கள் உள்பட 6.1 மில்லியன் மக்கள் தடுப்பூசி போட தகுதியானவர்கள் என்று அரசு கணித்துள்ளது.
மூன்றாம் கட்டமாக 50 முதல் 69 வயதுடைய பெரியவர்கள் மற்றும் 16 வயதுக்கு மேற்பட்ட பழங்குடியின மக்கள் மற்றும் Torres Strait Islander பகுதிகள் உள்ள மக்கள் என 6.5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
நான்காம் கட்டமாக 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கும், ஐந்தாம் கட்டமாக 16வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி போட வருபவர்களுக்கு ஆஸ்திரேலியா முழுவதும் 50 மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது. இரண்டு கட்டம் முடிந்ததும், தடுப்பூசி போடும் மையங்கள் 1000 அதிகரிக்கப்படும்.
Pfizer-BioNTech தடுப்பூசியின் 10 மில்லியன் அளவுகளையும், Oxford-AstraZeneca தடுப்பூசியின் 53.8 மில்லியன் அளவுகளையும் அரசு பெற உள்ளது. அமெரிக்காவின் Novavax தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ள நிலையில், இது வெற்றி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலியா 51 மில்லியன் அளவுகளை பெறக்கூடும். குறிப்பிட்ட எண்ணிக்கையில், குறிப்பிட்ட இடைவெளியில் மூன்று வகையான தடுப்பூசிகளையும் மக்களுக்கு வழங்கப்படும்.
குறிப்பாக Pfizer-BioNTech மற்றும் Novavax மூன்று வார இடைவெளியிலும், Oxford-AstraZeneca தடுப்பூசி நான்கு வார இடைவெளியிலும் போடப்படும். கொரோனா தொற்று ஆஸ்திரேலியாவில் மற்ற நாடுகளை விட குறைவாக உள்ளது. எனவே தடுப்பூசியின் செயல்திறனையும், பாதுகாப்பையும் தீவிரமாக TGA கண்காணித்து மக்களுக்கு மெதுவாக தடுப்பூசி வழங்குகிறது.