Breaking News

நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் தொடர்ந்து உச்சத்தில் தொற்று பாதிப்பு : ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்த நிலையில் பள்ளிகள் திறக்கும் முடிவு தள்ளி வைக்கப்படுமா என எதிர்பார்ப்பு

நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2 ஆயிரத்து 850 பேர் தொற்று பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் 209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்தனர். இதற்கு முந்தைய அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை 29 ஆக இருந்த நிலையில் அதனை முறியடிக்கும் வகையில் உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகி உள்ளது. இதனை அடுத்து ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 919 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 29 ஆயிரத்து 830 புதிய தொற்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் 13 ஆயிரத்து 763 பேர் வீடுகளில் இருந்து ஆன்டிஜென் ரேபிட் பரிசோதனை மூலமாகவும், 16 ஆயிரத்து 67 பேர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலமாகவும் தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ப்ரீமியர் Dominic Perrottet கூறியுள்ளார்.

1.2 மில்லியன் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் தற்போது நியூசவுத்வேல்ஸ் மாகாணத்திற்கு வந்துள்ளதாகவும், மேலும் 15 மில்லியன் பரிசோதனை கருவிகள் வர உள்ளதாகவும் இதன் மூலமாக பரிசோதனை எண்ணிக்கை வரும் நாட்களில் உயரும் என்றும் ப்ரீமியர் Dominic Perrottet தெரிவித்துள்ளார்.

Continuing peak in New South Wales. 36 dead in a single day.நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டில் பள்ளிகள் முதல் நாளாக திறக்கப்பட உள்ள நிலையில், சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளதாகவும் போதுமான கட்டமைப்பு உதவிகளை செய்ய இயலாத நிலையில் மாகாண அரசு உள்ளதாகவும் ப்ரீமியர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் நடைபெற உள்ள தேசிய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் பள்ளி திறப்பு குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பள்ளிகளில் தேவைப்படும் பட்சத்தில் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஆஸ்திரேலிய மத்திய அரசு மற்றும் மாகாண அரசின் 50 – 50 பங்களிப்பில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாகவும் நியூசவுத்வேல்ஸ் மாகாண ப்ரீமியர் Dominic Perrottet கூறியுள்ளார்.

பிள்ளைகள் மீண்டும் பள்ளிக்கு திரும்புவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடைசியாக மூடப்படுவதும் முதலில் திறக்கப்படுவதும் பள்ளியாக இருக்க வேண்டும் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றை ப்ரீமியர் குறிப்பிட்டுள்ளார்.

Link Source: https://ab.co/3FCDmp5