Breaking News

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று மருந்து வழங்கும் புதிய திட்டம் : மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு சென்று மருந்துகளைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன.

இதனை தவிர்க்கும் பொருட்டு மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தின் மூலமாக அவர்களுக்கு தேவைப்படும் மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்கும் புதிய திட்டத்தை தமிழகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சமணப்பள்ளி பகுதியில் நடைபெற்ற விழாவில் காணொலி காட்சி வாயிலாக கோவை, சென்னை, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 7 மவட்டங்களில் முதற்கட்டமாக இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அங்கேயே பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

Chief Minister MK Stalin launches home-based medicine scheme for patients treated in government hospitals in Tamil Nadu.முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக 20 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்றும் இதற்காக முதற்கட்டமாக 242 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், சமூக நலவாழ்வு மையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மூலமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவிலேயே நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று மருந்து வழங்கும் திட்டம் முதன் முதலாக தமிழகத்தில் தொடங்கப்பட்ட இருப்பதாகவும் இதன் மூலம் பல்வேறு தரப்பினரும் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3AeH3Pv