குயின்ஸ்லாந்து நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோல்ட் கோஸ்ட் மற்றும் தென் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வானிலை தொடர்பான மாற்றங்களை முன்கூட்டியே கணித்து மழை தொடர்பான அறிவிப்புகளை தெரிவிப்பதில் மிகவும் சவாலான சூழல் நிலவுவதாக வானியல் ஆய்வாளர் Neil Bennett தெரிவித்துள்ளார்.
மேற்கு நியூ சவுத் வேல்ஸ் மாகாணப் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைப் பொழிவு தொடர்பான நிலவரங்கள் கணிக்க முடியாத சூழலில் இருப்பதாகவும், ஆனால் மிக மோசமான மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மிகவும் மோசமான கடினமான வானிலை மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் மழை குறித்த கணிப்புகளை அறிவிப்பதில் சிக்கல் ஏற்படுவதாக Neil Bennett
கூறியுள்ளார்.
Lismore பகுதிகளிலிருந்து பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். குறிப்பிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளின் சேதம் மோசமானதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நகரின் முக்கிய சாலைகள் மற்றும் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இல்லாததன் காரணமாக அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக மக்கள் தவித்து வருகின்றனர்.
செயற்கைக்கோள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மூலமாக மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வந்தாலும் முன்கூட்டியே துல்லியமாக கணிக்க இயலாத அளவுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மழை பாதிப்பு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகள் இருக்கும் என்பது தொடர்பான விவரங்களை உடனடியாக அவசரகால சேவை மையத்திற்கு அனுப்பி வருவதாகவும், மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் அவசரகால சேவை மையம் மற்றும் காவல்துறையினரின் அறிவுரையை ஏற்று பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மக்களின் ஒத்துழைப்பு உயிரிழப்பு ஏற்படாத சூழலை உருவாக்குவதற்கு உதவி செய்யும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Link Source: https://ab.co/3wTdu80