Breaking News

Bushfire முதல் கொரோனா வரை நெருக்கடிகளுக்கு மத்தியில் ,2020ல் ஆஸ்திரேலிய அரசியல் சூழல் !

2020ஆம் ஆண்டு மிகக் கடினமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாக கடந்த மார்ச் -ல் பிரதமர் Scott Morrison கூறியுள்ளார். காட்டுத்தீ முதல் கொரோனா சமூகப் பரவலினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை, ஆஸ்திரேலியர்களை சோதனைக்கு உள்ளாக்கி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் எதிர்பாராத சவால்களை சரி செய்யும் முயற்சியில், ஆஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் வந்துள்ளனர்.

காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட Cobargo நகரத்தை கடந்த ஜனவரி இரண்டாம் தேதி பிரதமர் பார்வையிட்டார். இந்த விபத்து ஏற்படும்போது அவர் குடும்பத்தோடு ஹவாய் தீவுக்கு சுற்றுலா சென்றது விமர்சனத்துக்கு உள்ளானது. பின்னர் சுற்றுலாப் பயணத்தில் பாதியில் திரும்பிய அவர் Cobargo நகரத்தை பார்வையிட சென்ற பொழுது, மக்களின் கோபக் குரலும் ஏமாற்றமும் வெளிப்பட்டன. பெண் தீயணைப்பு வீரர் ஒருவர் பிரதமருடன் கைகுலுக்க மறுத்தது பரவலாகப் பேசப்பட்டது.

காட்டுத்தீ மற்றும் காலநிலை கொள்கையில் இந்த அரசு எடுத்த நடவடிக்கையின்மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த கோடைகால காட்டுத்தீயினால் 24 Million Hectare நிலப்பகுதிகள் எரிந்தன. 33 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 3,000 வீடுகள் அழிந்தன. காட்டுத் தீயினால் ஏற்பட்ட அழிவை தடுப்பதில் ஏற்ப்பட்ட தோல்விகளை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுவின் அறிக்கை அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அறிக்கையில் 80 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.

இந்தக் காட்டுத் தீயின் அச்சுறுத்தல் ஓய்ந்த நிலையில், Covid-19 உருவத்தில் மீண்டும் ஆஸ்திரேலியாவில் ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டது. முதல் தொற்று ஜனவரி 25ஆம் தேதி கண்டறியப்பட்டது. இந்த சூழ்நிலையில் நாட்டிற்கான தனது உரையில், இந்த தொற்றினை தடுப்பதற்கு ஆஸ்திரேலியாவிடம் சிறந்த திட்டம் உள்ளதாகவும் பிரதமர் உறுதி அளித்திருந்தார். இது உலக அளவிலான சுகாதார நெருக்கடி நிலை என்பதால் பல பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.

கொரோனா வைரஸ் முடக்கத்தினால் பலர் வேலை இழந்தனர். இந்த காலகட்டத்தில் சிலர் Toilet பேப்பர் உட்பட பல பொருட்களை பதுக்கி வைத்திருந்தனர். இது தமக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் Morrison கேட்டுக்கொண்டார். மேலும் இந்த சமூக பரவல் காலகட்டத்தில் ஆசிய- ஆஸ்திரேலியர்கள் இன ரீதியான தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். இதற்கு பிரதமர் மறுப்பு தெரிவித்திருந்தார் .

கொரோனா சமூகப்பரவல் நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்த அமைக்கப்பட்ட புதிய தேசிய அமைச்சரவை தனது முதல் கூட்டத்தினை கடந்த மார்ச் 15-ஆம் தேதி நடத்தியது. அதன்பின்பு அடிக்கடி இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்பு கரோனா வைரஸ் முடக்க விதிகளை பற்றி செய்திகள் வெளியிடப்பட்டன. தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டு விதிகளான பள்ளிகள் மூடுதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு விதிகளில், சில அரசியல் தலைவர்களுக்கு மாற்றுக்கருத்துக்கள் இருந்தன.

கொரோனா தீவிரம் அதிகமானதால் உலக அளவிலான ஒரு விசாரணை வேண்டுமென ஆஸ்திரேலியா தெரிவித்திருந்தது. இதற்கு சீன அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. பிற நாடுகளிலுள்ள பல ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்பும் போது அவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயப்படுத்த பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் மாதம்,அனைத்து ஆஸ்திரேலியர்களையும் வரும் கிறிஸ்மஸ்-க்குள் நாடு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும் என Morrison உறுதியளித்திருந்தார். இருந்தாலும் இன்னும் 30 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்புவதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது சர்வதேச பயண தடையை வரும் மார்ச் மாதம் வரை ஆஸ்திரேலியா நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Sydney -ல் Ruby Princess கப்பலில் புறப்பட்ட பயணிகளின் மூலம் 662 தொற்றுகளும், 28 இறப்புகளும் ஏற்பட்டன. இந்த நிகழ்வு Commonwealth மற்றும் NSW அதிகாரிகளுக்கு இடையே பிரச்சனையை உண்டாக்கியது. Victoria -வில் ஏற்பட்ட இரண்டாம் கட்ட தொற்று பரவலால் அரசின் மீது அழுத்தம் அதிகரித்தது.

கொரோனா முடக்கத்தினால் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் கடந்த 30 வருடங்களில் மீண்டும் பொருளாதார மந்தநிலை ஆஸ்திரேலியாவில் தலைதூக்கியது. இந்த நெருக்கடியை சமாளிக்க $251 பில்லியன் ஒதுக்குவதாக அரசு அறிவித்தது. மேலும் இந்த நெருக்கடியை சமாளிக்க பல திட்டங்கள் பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்டன. இந்த மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் $213.7 Million பற்றாக்குறை உண்டானதாக Treasuer Josh Frydenberg தெரிவித்திருந்தார். டிசம்பர் மாத பட்ஜெட் உரையில் ஆஸ்திரேலியா இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நலத்திட்ட உதவிகளுக்கான பல திட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்திருந்தாலும், பலதரப்பட்ட பணியாளர்கள் விடுபட்டு உள்ளதாக விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது. தற்காலிக Visa வைத்துள்ள சர்வதேச மாணவர்கள் பலர் இந்த திட்டங்களுக்கான பட்டியலில் இல்லாததால் அவர்கள் பொருளாதார பிரச்சினையை சந்தித்தனர்.

கொரோனா பரவல் அச்சுறுத்தலினால் பாராளுமன்ற கூட்டங்கள் பல வாரங்களாக தாமதப்படுத்த பட்டிருந்தன. பின்னர் இணையம் வாயிலாக சமூக விலகல் பாராளுமன்ற கூட்டம் நடந்தது. புதிய Closing The Gap திட்டத்தினை அறிவித்ததுமட்டுமல்லாமல், பூர்விக ஆஸ்திரேலியர்கள் உடன் இணைந்து, தொடர்ந்து எழக்கூடிய ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க ஆஸ்திரேலிய அரசு உறுதி அளித்தது.

அரசின் Robodebt திட்டத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த வருடத்தில் ஒரு முடிவு ஏற்பட்டது. நான்கு வருடமாக நடைபெற்ற Brereton விசாரணையில், 39 ஆப்கான் மக்கள் சட்டத்திற்குப் புறம்பாக கொல்லப்பட்டுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது. இதில் 25 ஆஸ்திரேலிய SAS வீரர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் காலநிலை மாற்ற கொள்கை உலகளவில் விமர்சனத்துக்கு உள்ளானது. Paris ஒப்பந்தத்தின்படி ஆஸ்திரேலியா தன்னுடைய இலக்கினை விரைவாக அடைய முயற்சி செய்யும் என்று Mr. Morrison உறுதியளித்திருந்தார்.