ஊதிய உயர்வு உரிய ஓய்வு மற்றும் வார விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இது தொடர்பாக அரசிடம் பல்வேறு முறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே பேரணியாகச் சென்ற 400க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் போக்குவரத்து ஊழியர் சங்கங்களுக்கும் அரசுக்கும் இடையிலான ஊதிய உயர்வு பிரச்சினை குறித்து உரிய முறையில் தீர்வு காணப்படவேண்டும் என்று கூறியுள்ளனர். பணி நிரந்தரம் ஊதிய உயர்வு ஓட்டுநர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஓட்டுனர்கள் போராட்டம் காரணமாக மேற்கு சிட்னி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இயக்கப்பட்ட ஒரு சில பேருந்துகளும் தாமதமாக புறப்பட்டதால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
அரசிடம் அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்ட பின்னர் கடைசி ஆயுதமாக போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும், மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு ஓட்டுநர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது சிக்கலை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளும் நியாயமானது என்றும் அதனை அரசு பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓட்டுனர்கள் சங்கம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து ஓட்டுனர் அதில் பயணிக்கும் பயணிகள் என அனைவருக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்றும் அதனடிப்படையிலேயே தங்கள் கோரிக்கைகள் அமைந்திருப்பதாகவும் ஓட்டுனர் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
Link Source: https://ab.co/3jwNDdU