சமூக வலைத்தளங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான உறுதியான திட்டத்தை உலக அளவில் உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஜி-20 மாநாட்டில் தலைவர்களிடம் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் முன்வைக்க உள்ளார். இதற்காக வியாழனன்று இத்தாலியின் ரோம் நகருக்கு அவர் புறப்படுகிறார். அங்கு ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் ஆஸ்திரேலிய பிரதமர் பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநாட்டில் உரையாற்ற உள்ளார். உலக வர்த்தகம், சுகாதாரம், பருவநிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரதான முன் மொழிவுகளில் ஒன்றான சமூகவலைதளங்களில் உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்துதல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகிய விவகாரங்கள் பிரதமர் ஸ்காட் மோரிசனால் பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் செயல்படும் சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் செயல்பாடுகள், தகவல் பரிமாற்ற முகவர்கள் ஆகியோருக்கான சிறப்பு நடைமுறைகள் அடங்கிய வரைவுச் சட்டம் ஒன்றை ஆஸ்திரேலிய அரசு வெளியிட உள்ளது. அதன் அடிப்படையில் ஜி20 மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்களின் ஆதரவை கோரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ரகசிய குறியீடு வழங்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே அனைத்து இயக்கங்களும் மாற்றப்படும் என்றும், மிகப்பெரிய அளவிலான ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெறும் போது கட்டாயம் ரகசிய குறியீடு பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், டிக் டாக் போன்ற செயலிகளை சிறுவர்கள் பயன்படுத்தும் போது அதற்கு உரிய வயது, அனுமதி, பயன்பாடு ஆகியவற்றை கண்காணிக்கப்பட வேண்டும்.
மேலும், 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பயன்படுத்தும்போது பெற்றோர்களின் உரிய அனுமதி தரப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அதற்கு ஏற்ற வகையில் சமூக வலைதளங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கவும் வரைவு சட்டத்தில் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய கல்வி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் 84 சதவீதம் பேர் சமூக வலைதளங்களின் மூலமாக ஏற்படும் பாதிப்புகளில் குழந்தைகளுக்கு அதிக இடம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஜி-20 மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்த விவகாரம் மட்டுமின்றி, 2050ல் பூஜ்ஜிய உமிழ்வு இலக்கு திட்டம் தொடர்பாகவும் உலகத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜி-20 மாநாட்டில் அர்ஜென்டினா, பிரேசில், கனடா, சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, துருக்கி, அமெரிக்கா, லண்டன், மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பங்கேற்க உள்ளன. அதே நேரத்தில் ஜப்பான், சீனா, மற்றும் ரஷ்யா ஆகிய நாட்டு தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Link Source: https://bit.ly/3ClbW6n