இந்தோனேஷியாவில் கால்நடைகளை கால் மற்றும் வாய் என்கிற நோய் பாதிப்பு தாக்கி வருகிறது. இந்நோய் ஆஸ்திரேலியாவுக்குள் பரவக்கூடும் என்கிற அச்சம் நிலவுகிறது. இதனால் நாட்டின் பல்வேறு முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி ஆஸ்திரேலியாவுக்குள் வரும் சர்வதேச பயணிகள் தங்கள் காலணிகளை அகற்ற வேண்டும். அவர்கள் விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள உயிர் பாதுகாப்பு மண்டலத்தில் கிருமிநாசினி தடவப்பட்ட மிதியடி மீது நடந்து வரவேண்டும். அதையடுத்து அவர்கள் காலணிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் வலுவான உயிரியல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக முதன்முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் நடவடிக்கையானது உயிரியல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று மத்திய விவசாய அமைச்சர் முர்ரே வாட் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விமான நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்நடவடிக்கைக்கு தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் பியோனா சிம்சன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.