மேற்கு ஆஸ்திரேலியா காவல்துறைக்கு மிக சிறப்பான நாளாக இந்த தினம் அமைந்ததாக காவல்துறை ஆணையர் Chris Dawson தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி கார்னோர்வன் நகர் அருகே அமைந்துள்ள, பிளோஹோல்ஸ் பகுதியில் முகாம் அமைத்து தங்கியிருந்த எல்லி ஸ்ம்த்-ஜேக் கிளிட்டன் தம்பதியின் இளைய மகள் கிளியோ ஸ்மித் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி கடத்தப்பட்டார். அதிகாலை 3 மணியளவில் கூடாரத்தில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியை மர்ம நபர் கடத்திச்சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 100க்கும் அதிகமானவர்கள் அடங்கிய தேடுதல் குழு அமைக்கப்பட்டது. சிறுமி கடத்தப்பட்ட விவகாரம் தேசிய அளவில் கவனம் ஈர்த்ததை தொடர்ந்து, கடத்தப்பட்ட சிறுமியை மீட்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்திருந்தார். பிளோஹோல்ஸ் பகுதியில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலும், சாலையோரங்களில் இருந்த வணிக நிறுவனங்களின் கண்காணிப்பு கேமராவை கைப்பற்றிய மேற்கு ஆஸ்திரேலிய காவல்துறையினர், அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
ஆனாலும் அதில் எந்தவிதமான தகவலும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை என்று கருதப்பட்டது.
இந்நிலையில் சிறுமியின் வீடு அமைந்துள்ள பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சிறுமி மீட்கப்பட்டதாக மேற்கு ஆஸ்திரேலிய காவல் துறை ஆணையர் Chris Dawson தெரிவித்துள்ளார்.
சிறுமி மீட்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் உறுதி செய்த காவல்துறை ஆணையர், சிறுமி குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒரு வீட்டை சோதனை செய்த போது, அங்கு 4 வயது நிரம்பிய சிறுமி இருந்ததாகவும், அவரிடம் காவலர்கள் பெயரை கேட்ட போது என்னுடைய பெயர் கிளியோ என்று தெரிவித்துள்ளார். சிறுமி மீட்கப்பட்ட செய்தியை அவரின் தாயாரிடம் காவல்துறையினர் தெரிவித்த போது மிகுந்த மகிழ்ச்சியுற்றதாகவும், தற்போது சிறுமி நலமுடன் பாதுகாப்பாக உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு ஆஸ்திரேலிய காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரிமீயர் Mark McGowan’s, இரவு பகலாக சிறுமியை மீட்க பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
கோல் ஸ்மித் கண்டறியப்பட்டதை தொடர்ந்து தன்னுடைய குடும்பம் மீண்டும் முழுமை அடைந்திருப்பதாக எல்லி ஸ்மித் தன்னுடைய சமூக வலைதளத்தில் தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார். சிறுமி மீட்கப்பட்ட நிலையில், அந்த வீட்டில் வசித்த 36 வயதான நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதுகாப்பாக சிறுமியை மீட்ட மேற்கு ஆஸ்திரேலிய காவல்துறைக்கு பிரதமர் ஸ்காட் மோரிசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3nQBUc1