மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தலைமையில் ராயல் மெல்பேர்ன் மற்றும் ஆல்ஃபர்ட் ஹெல்த் மருத்துவமனைகள்,பேக்கர் இருதய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து விக்டோரியாவின் அவசர ஊர்தி சேவைகள் தொடர்பான ஆய்வில் இறங்கின. இதுதொடர்பான முடிவுகள் இம்மாதத்துக்கான ஆஸ்திரேலிய மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அவசர ஊர்தி சேவையை நாடிய 2 லட்சம் நோயாளிகளின் மருத்துவ முடிவுகளை வைத்து குழுவினர் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி 17 நிமிடங்கள் காத்திருப்புக்கு பிறகு அவசர ஊர்தி சேவையை பெற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரும், 30 நாட்களக்கு பிறகு அபாய கட்டம் வரை சென்று காப்பாற்றப்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் அவசர ஊர்தி வாகனத்தில் ஒரு நோயாளியை பத்திரமாக ஏற்றுவதற்கு 21 நிமிடங்கள் வரை தேவைப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா பரவலுக்கு பிறகு அதுவே 24 நிமிடங்கள் வரை நீண்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் மட்டுமே அவசர ஊர்தி வாகனங்களில் நோயாளிகளை ஏற்றுவதற்கு ஏற்பட்ட காலதாமதத்தால் 70 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது. அப்போது ஆஸ்திரேலியாவில் எங்கும் கொரோனா பரவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே விக்டோரியா மாநில அரசு, கொரோனா பரவல் மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைகளால் சுகாதாரத்துறை பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தெரிவித்திருந்தது. தற்போது இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி மேலும் சுகாதாரத்துறையை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்து இந்நிலை தொடருவதால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இவ்வாய்வு முடிவுகள் தொடர்பாக ‘ஆம்புலன்ஸ்; விக்டோரியா’ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அந்தோனி கார்லியன் செய்தியாளர்களை சந்தித்தார். மோனாஷ் பல்கலைக்கழ ஆய்வு முடிவுகளை தங்களுடைய அமைப்பு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. நோயாளிகள், அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கவனிப்பை பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் இன்னும் செய்ய வேண்டிய பணிகளை குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க இந்தாய்வு வழிவகை செய்துள்ளது. விக்டோரியா சுகாராத்துறை நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து ஊக்கத்துடன் செயல்படும் என நான் உறுதி கூறுகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அவசர ஊர்தி மூலமாக மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நோயாளி அபாயக் கட்டத்தை அடைந்தார். கடந்த ஆறு மாதங்களில் இதுபோன்ற சம்பவம் ஆறாவது முறையாக நடந்துள்ளது. இதுதொடர்பாக பேசிய விக்டோரியாவின் முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ், மருத்துவப் பணியாளர்கள் பலரும் உடல்நலக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனார். அதனால் ஏற்படும் தட்டுப்பாட்டின் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகியுள்ளன. அதை தடுக்கும் முயற்சியாக பாதுகாப்புப் படை வீரர்கள், அவசர ஊர்தி சேவை பிரிவில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளனர். வரும் நாடுகளில் இதுபோன்ற குறைபாடுகள் களையப்படும் என்று கூறினார்.