ஹைரசான் வெஸ்ட் என்கிற பகுதியில் இயங்கி வருகிறது லீமிங் சீனியர் உயர்நிலைப் பள்ளி. இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். கடந்த புதன்கிழமை வழக்கம் போல ஏழு வயதான சிறுவன் பள்ளிக்கு சென்றுள்ளார்.
வீட்டிலிருந்து கிளம்பிய சிறுவன் குறிப்பிட்ட பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால் வேறு எங்கும் அவர் இறங்கவில்லை. பேருந்துக்குள் இருந்த ஓட்டுநர் மற்றும் உதவியாளரும் சிறுவனை கவனிக்கவில்லை. கடைசியாக பேருந்து பணிமனைக்கு சென்றுவிட்டது. ஐந்து மணிநேரம் கழித்து, உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஓட்டுநர் பேருந்தை எடுக்கும் போது, உள்ளே சிறுவன் இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து நகர நிர்வாகத்திடம் பணிமனை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் மாணவரை மீட்டு, மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தினர். நல்வாய்ப்பாக சிறுவனுக்கு எந்தவிதமான உடல்நலப் பிரச்னை ஏற்படவில்லை. இதையடுத்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பணிமனைக்கு வரவழைக்கப்பட்டனர்.
நகர காவல்துறை உதவியுடன் மாணவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். சம்மந்தப்பட்ட சிறுவன் மாற்றுத்திறனாளி என்று கூறப்படுகிறது. பேருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளரின் அலட்சியமே இதற்கு காரணம், இந்த சம்பவத்தால் சிறுவனின் மனநிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் மாற்றுத்திறனாளி ஆணையத்தின் தலைவர் சாம் கானர் தெரிவித்துள்ளார்.