சர்வதேசளவில் புகழ்பெற்ற மெல்பேர்ன் இந்திய திரைப்பட விழா 13-வது முறையாக இன்று துவங்கியுள்ளது. மொத்தம் 9 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், இந்தியாவில் தயாரான 120 படங்கள் திரையிடப்படவுள்ளன. முழு நீள பொழுதுப்போக்கு படங்கள் மட்டுமின்றி ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவையும் திரையிடப்படுகின்றன.
நிகழ்வை துவங்கி வைத்து பேசிய நடிகர் அபிஷேக் பச்சன், மெல்பேர்னில் இந்திய திரைப்படங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. அனுராக் கஷ்யப் இயக்கத்தில் டாப்ஸியுடன் நான் நடித்துள்ள ‘மன்மர்ஜியான்’ என்கிற படம் நிகழ்வில் திரையிடப்படவுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகை தமன்னா, இந்தியாவில் திரைப்படங்கள் மொழி அடையாளங்களை வைத்து பார்க்கப்படுகிறது. இந்த கருத்து இந்தியாவிற்கு மட்டுமே தனித்துவமானது என்று நான் நினைக்கிறேன், நான் வெளிநாடு செல்லும் போதெல்லாம் மக்கள் வேறுபடுத்திக் கேட்பதில்லை, அவர்கள் அனைத்து விதமான படங்களையும் இந்திய சினிமா என்று அழைக்கின்றனர். அதை மெல்பேர்னிலும் உணர முடிகிறது என்றார்.
திரைப்பட விழாவின் முதல் நாளில் டாப்ஸி நடித்துள்ள ‘தோபாரா’ என்கிற படம் திரையிடப்படுகிறது. வரும் திங்களன்று இந்தியாவில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்தில் நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.