மெல்போர்னில் கட்டுமானம், வனம், சுரங்கம், சுரங்கம் ஆகிய ஊழியர்களின் கூட்டமைப்பான CFMEU அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இதனைத்தொடர்ந்து அந்த அலுவலகம் முன்பாக தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கூட்டத்தை கலைப்பதற்கான அனைத்து தயார் நடவடிக்கைகளிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதில் நோய் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாகவும், காவல்துறையினர் மற்றும் பத்திரிகையாளரை தாக்கியதாகவும் இதுவரை 62 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். West Gate Bridge பகுதியில் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் அந்த பகுதியையே ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் உரிய முன் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அரசின் உத்தரவுகளை மீறியதாகவும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள், தண்ணீர் பீய்ச்சி அடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக நகரில் நடைபெற்று வரும் மிக பயங்கரமான நடவடிக்கைகள் மிகவும் கண்டனத்திற்கு உரியது என்றும் இதில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடம் இல்லை என்றும் பிரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார். வன்முறை ஏற்படுத்துவது, அமைதியை குலைப்பது எந்தவகையிலும் வைரஸ் தொற்று பாதிப்பை குறைப்பதற்கு உதவாது என்றும், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்திலேயே அவற்றை சரி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நகரின் முக்கியமான பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் ஒரு பலனும் இல்லை என்பது தெரிந்தும் மீண்டும் தொழிலாளர்கள் போராட்ட களத்திற்கு வரும் பட்சத்தில் காவல்துறையினர் மீது நடவடிக்கை மிக மோசமானதாக இருக்கும் என்று விக்டோரியா காவல் ஆணையர் Shane Patton கூறியுள்ளார். CFMEU அலுவலகத்திலிருந்து தொழிலாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக நடக்க முயன்ற போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முடக்க நிலையை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை பணிக்கு அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கூட்டமைப்பு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விக்டோரியா அரசு கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பிராந்திய உள்ளூர் பகுதிகளிலும் கட்டுமான பணிகளை நிறுத்துமாறு பிரிமியர் டேனியல் ஆன்ட்ரூஸ் கூறியுள்ளார்.
Link Source: https://bit.ly/3hV6sqU