Breaking News

கொரோனா காலத்தில் அதிகரித்துவரும் இணையவழி மோசடிகள் !

கொரோனா சமூக பரவலினால் ஏற்படும் மக்களின் அச்சத்தினை, பல மோசடி பேர்வழிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மோசடியினால் 5000க்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. Covid-19 தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்த ,QR code Scan-in தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளன.

தேவையில்லாமல் இணையதளங்களில் தகவல்களை பகிர்வது ஆபத்தை வரவழைக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். வர்த்தகம் அல்லது தனியாருக்கு சொந்தமான QR செயலிகளினால் நம்முடைய தகவல்கள் தவறான நபர்களிடம் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனிநபர் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை பெறுவதற்காக வடிவமைக்கப்பட்ட மோசடி இணைப்பு வாயிலாகவும், குறுஞ்செய்தி வழியாகவும் அரசு அதிகாரிகள் போல் நடித்து, மோசடிப் பேர்வழிகள் இந்த தொழில்நுட்பத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளனர் என Australian Regulatory Body தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் 5,000-க்கும் மேற்பட்ட Covid-19 சம்பந்தப்பட்ட மோசடிகள் நடைபெற்றுள்ளதாகவும் ,இதன் மூலம் $6,280,000 இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. நிதி உதவி சலுகைகள் அல்லது தொற்றுள்ளவர்களை கண்டறியும் ஏமாற்று அழைப்புகள் மூலமாகவே பல மோசடிகள் நடந்துள்ளதாக ACCC Deputy Chair Delia Rickard தெரிவித்துள்ளார்.

அரசு அதிகாரிகள் போல் நடித்து தொற்று ஏற்பட்டவர்களுக்கு சலுகைகள் பெற்றுத் தர அவர்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி எண் தகவல்களை மோசடிப் பேர்வழிகள் பெறுகின்றனர். மக்கள் இதில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் திடீரென வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட அமைப்புகளைத் தொடர்பு கொண்டு, தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசு அதிகாரிகள் தனிப்பட்ட தகவல்களையும் கடன் அட்டை எண்கள் மற்றும் வங்கிக் கணக்கு தகவல்களையும் கேட்டுப் பெற மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார் .கடந்த காலங்களில் QR Code பயன்பாட்டுக் இணைப்புகள் மூலம் 28 மோசடிகள் நடைபெற்றதாகவும் , $100,000 இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வர்த்தகரீதியான QR code சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய, Queensland-ஐ தவிர அனைத்து மாகாணங்களிலும் அரசு சார்ந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. NSW-வின் அனைத்து பகுதிகளிலும் ஜனவரி 1 முதல் இந்த செயலிகளின் முறைக்கு அனைத்து மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த செயலி மிகச்சிறந்தது என்றும், பாதுகாப்பானது என்றும் Kate Carruthers தெரிவித்துள்ளார் .

அனைத்து பகுதிகளிலும் இதை பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்றும், இதை பயன்படுத்துவதன் மூலம் தொற்று ஏற்பட்டவர்களை எளிதாக கண்டறியலாம் என்றும், அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வரக்கூடிய புத்தாண்டில் Covid-19 சம்பந்தப்பட்ட மோசடிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அனைத்து மக்களும் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்கும்படி ACCC அறிவித்துள்ளது. தடுப்பூசி தான் நமது அடுத்த மிகப்பெரிய இலக்காக இருக்க வேண்டும் என Rickard தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் பலதரப்பட்ட மோசடிகளை நாம் பார்க்க இருப்பதாகவும், தடுப்பூசி குறைந்த விலையில் தருகிறோம் என்று மோசடிப் பேர்வழிகள் தங்களை அணுகலாம் என்றும், இணையதளம் வழியாக உங்களுக்கு அழைப்புகள் வரலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அனைத்தும் தற்போது இணையதளம் வழியாக நடைபெறுவதால் மோசடி பேர்வழிகளுக்கு இது எளிதான ஒன்றாக உள்ளது. இது குறுகிய காலத்தில் சரிசெய்ய கூடிய பிரச்சனையும் இல்லை என்றும் Covid-19 பற்றிய அழைப்புகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.