சிட்னியில் சில மாற்றங்களுடன் கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. NSW- ல் மேலும் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேர் Northern Beaches -உடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
வரும் டிசம்பர் 24-ஆம் தேதி முதல் Sydney’s Northern Beaches-ல் கொரோனா முடக்கம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. வரும் 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில், Northern Beaches-ன் வடக்கு பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு 5 விருந்தினர்களை அழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் தெற்குப் பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு 10 விருந்தினர்களை அழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த இரண்டு பகுதிகளை சேர்ந்தவர்கள் Northern Beaches-யை விட்டு வெளியேற அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Greater Sydney மற்றும் Central Coast-ஐ சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு 10 விருந்தினர்களை அழைக்கலாம் என்றும், 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் எண்ணிக்கையில் எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 10 வயதுக்கு கீழ் என்று இருந்தது, தற்போது 12 வயதுக்கு கீழ் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் ஏற்படும் முன்னேற்றங்களை பொறுத்து இந்த விதிகள் மாற்றி அமைக்கப்படும் என NSW Premier Gladys Berejikilian தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 42,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், Northern Beaches உடன் தொடர்புடைய தொற்றின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயணிகளின் மூலம் தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட சுகாதார பணியாளர் ஒருவருக்கு உண்மையில் Northern Beaches பகுதியிலிருந்துதான் தொற்று உண்டானதாக NSW Chief Health Officer Kerry Chant அறிவித்துள்ளார். இந்தப் பணியாளருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்றும் குழப்பமாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . டிசம்பர் 18ஆம் தேதி Sydney-யில் இருந்து Darwin சென்ற Qantas விமான குழு பணியாளர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவசரமாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்த கொரோனா முடக்குதல் விதியில் மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் Christmas Eve, Christmas Day மற்றும் Boxing Day அன்று கூடும் கூட்டங்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27ஆம் தேதிக்கு பின் இதில் மாற்றம் இருக்கலாம் என்று தெரிகிறது.
தொற்று எண்ணிக்கை குறைந்த வண்ணம் இருந்தாலும், தொற்று உறுதியானவர்கள் சென்று வந்ததாக கூறப்படும் Gyms, உணவகங்கள், சூப்பர் மார்க்கெட் மற்றும் Pubs அனைத்தும் எச்சரிக்கையோடு செயல்படுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொற்று உண்டான 2 பேர் Central Coast-ஐ சேர்ந்தவர்கள் என்பதால் , அப்பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றின் பின்புலம் அறிய முடியாததால் எல்லைக் கட்டுப்பாட்டு விதிகள் மீண்டும் அமல்படுத்தலாம் என கூறப்படுகிறது. Avlon பகுதியில் வைரஸ் தொற்று எவ்வாறு உண்டானது என இதுவரை கண்டறியப்படவில்லை என Mr. Berejikilian தெரிவித்துள்ளார்.